டேங்கர் லாரி ஸ்டிரைக் : இன்று பேச்சுவார்த்தை!
தண்டையார்பேட்டை: டேங்கர் லாரி ஸ்டிரைக்கை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி இன்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் உடன்பாடு ஏற்படுமா என்பது மாலையில் தெரியும். சென்னை கொருக்குப்பேட்டையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கிளை உள்ளது. இங்கிருந்து தினமும் சுமார் 400 டேங்கர் லாரிகளில் பெட்ரோல், டீசல் ஏற்றி சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பங்க்குகளுக்கு சப்ளை செல்லப்படுகிறது. லாரிகள் மாதம் 60 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று பெட்ரோலிய பொருட்கள் சப்ளை செய்து வந்தன. இதை 50 ஆயிரம் கி.மீ. ஆக குறைத்ததை கண்டித்து டேங்கர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர். இன்று 3வது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. இதனால் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்குகளுக்கு பெட்ரோல், டீசல் கொண்டு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஐஓசி அதிகாரிகள் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் உடன்பாடு ஏற்படுமா என்பது மாலையில் தெரியும்.