மண்டபம்: கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளை உருட்டுக்கட்டை களால் அடித்து இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர். கண்ணாடி குத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. துப்பாக்கியால் சுடுவது, உருட்டுக்கட்டைகளால் தாக்குவது, மீன்களை அள்ளி கடலுக்குள் வீசுவது, கற்களை கொண்டு எறிவது, படகு மற்றும் வலைகளை சேதப்படுத்துவது என பல வகையிலும் தமிழக மீனவர்களை துன்புறுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கடந்த வாரம் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக கற்களை வீசி விரட்டியடித்தனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 631 விசைப்படகுகள் கடலுக்குச் சென்றன. கச்சத்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். தாங்கள் தயாராக கொண்டு வந்திருந்த கருங்கற்களை தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக வீசினர். பின்னர் உருட்டுக்கட்டைகளால் படகுகளை அடித்து சேதப்படுத்தினர். இதில் கண்ணாடி உடைந்து குத்தியதில், மீனவர் மகேந்திரனின் இடுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற மீனவர்கள் அவரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர். மகேந்திரன் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கியூபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீனவர்கள் கூறுகையில், ‘‘எங்களை தாக்குவதற்காகவே படகில் கற்களை அள்ளிப் போட்டு வருகின்றனர். எங்கள் உயிருக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. இனி கடல் தொழில் செய்வது கஷ்டம். இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளோம். மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து எங்களைக் காக்க வேண்டும்’’ என்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook