ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள 14 ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்தது!
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை எல்லையில் 916 ஏக்கரில் பெரிய ஏரி உள்ளது. ஏரியின் கரை நீளம் 1910 மீட்டர். இதில் 6 மதகுகள் உள்ளன. ஊத்துக்கோட்டையில் உள்ள 500-க்கும் அதிகமான விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். இந்த ஏரியில் மூன்று மதகுகள் பழுதடைந்துள்ளன. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர், நந்தனம் ஏரிகளின் உபரி நீர், ஆரணி ஆற்றின் வழியாக பெரிய ஏரிக்கு திருப்பி விடப்படுகிறது. இதை தவிர மழை நீரும் சேமிக்கப்படுகிறது. இந்த ஏரி நீண்ட நாட்களாக தூர் வாரப்படால் பராமரிப்பின்றி உள்ளது.
அதேபோல் ஊத்துக்கோட்டையை சுற்றி பெரிய ஏரி மற்றும் செஞ்சியகரம், ஓடை தாங்கல், பேரண்டூர், செஞ்சியகர செங்கிலி குப்பன் தாங்கல், பாலவாக்கம், லட்சுவாக்கம் உள்ளிட்ட 14 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் முட்புதர்கள் சூழ்ந்துள்ளது. மழைநீர் ஏரிக்கு வரும் பாதைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஏரியை சிலர் ஆக்கிரமித்து அவ்வவ்போது பயிரிட்டு வருகின்றனர்.
இதனால், கன மழை பெய்தாலும் ஏரியில் நீர் நிரம்புவதில்லை. தங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கும் ஏரியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது ஏரியின் கரை மட்டுமே பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏரி பகுதிகளை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்படும்’’ என்றார்.