மும்பை தாக்குதலுக்கு ஐஎஸ்ஐதான் காரணம்!
லண்டன்: கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 164 பேர் பலியாயினர். அதே ஆண்டு ஜூலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடந்த தாக்குதலில் 58 பேர் பலியானார்கள். இந்த 2 தாக்குதலுக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள்தான் காரணம் என்று இந்தியா ஆதாரப்பூர்வமாக கூறியது. ஆனால், எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று பாகிஸ்தான் தொடர்ந்து மறுக்கிறது. இந்நிலையில், 2 தாக்குதலுக்கும் ஐஎஸ்ஐ.தான் காரணம் என்று பிபிசி பரபரப்பு செய்தி வெளியிட்டது.
ரகசிய பாகிஸ்தான் என்ற தலைப்பில் கடந்த புதன்கிழமை 2 பாகங்களாக பிபிசி நிகழ்ச்சி ஒளிபரப்பியது. இதில் அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ.வின் முக்கிய அதிகாரி புரூஸ் ரீடெல் பேட்டி அளித்துள்ளார். இவர் அதிபர் ஒபாமாவின் ஆலோசகராகவும் பணியாற்றி உள்ளார். பேட்டியில் புரூஸ் கூறுகையில், காபூலில் தாக்குதல் நடக்க போவது குறித்து ஒபாமாவிடம் அப்போதே தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் பாகிஸ்தான் அதிபருக்கும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
பாகிஸ்தான் தொடர்ந்து இரட்டை வேடம் போடுவது பற்றியும் ஒபாமாவிடம் கூறினேன். பாகிஸ்தான் ராணுவத் தளபதிக்கு தெரியாமல் எந்த செயலும் நடக்காது. மும்பை, காபூலில் நடந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் காரணம் என்றால், அதேபோல் ஐஎஸ்ஐ.யும் காரணம் என்று கூறியுள்ளார்.
இரண்டாவது பாகத்தில் புரூஸ் கூறுகையில், மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு ஐஎஸ்ஐ நேரடியாக பயிற்சி அளித்த தகவல் சிஐஏ.வுக்கு கிடைத்தது என்று கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.