அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு : வைகோ உண்ணாவிரதம்!
நெல்லை: கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இடிந்தகரையில் இன்று உண்ணாவிரதம் இருந்தார்.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தை மூடக்கோரி 2 மாதங்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அணுஉலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் உண்ணாவிரதம், முற்றுகை என பல கட்ட போராட்டம் நடத்தப்பட்டது. இடிந்தகரையில் அப்பகுதியினர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
இதற்கிடையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 5ம்தேதி (இன்று) இடிந்தகரையில் பொதுமக்களுடன் சேர்ந்து தனது கட்சியினரும் உண்ணாவிரதம் இருப்பார்கள் என்று அறிவித்தார்.அதன்படி இன்று 19-வது நாளாக இடிந்தகரையில் நடந்துவரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமை வகித்தார்.
இதையொட்டி கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூத்தன்குழி, உவரி, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரத்து 500 நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக பாளை ஜோதிபுரத்தில் போராட்டக்குழுவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.