உ.பி. சட்டசபைக்கு ஏப்ரலில் 5 கட்டங்களாக தேர்தல்?
புதுடெல்லி: உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டசபைகளின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. இதையடுத்து அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. 5 மாநில தேர்தல்களும் பிப்ரவரியில் ஒன்றாக நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில் உத்தரகண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி மாதத்தில் ஒரே கட்டமாகவும், உத்தரபிரதேசத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கி 5 கட்டங்களாகவும் தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் பரிசீலித்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. உ.பி.யுடன் சேர்த்து கோவாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பணவீக்கம், விலைவாசி உயர்வு, அன்னா ஹசாரே விவகாரம் என பல்வேறு பிரச்னைகளில் காங்கிரஸ் சிக்கி தவிப்பதால் சீக்கிரமாக தேர்தல் நடத்துவது தமக்கு சாதகமாக இருக்கும் என மாயாவதி கருதியிருந்தார். இந்நிலையில் தேர்தல் தள்ளிப்போவது மாயாவதிக்கு ஏமாற்றத்தை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.