பாஜ ஆதரவு இல்லாவிட்டால் ராம்தேவ் கதிதான் அன்னாவுக்கு : நிதின் கட்கரி
பனாஜி: பாஜ ஆதரவு கிடைக்காமல் இருந்திருந்தால் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவுக்கு ஏற்பட்ட கதிதான அன்னா ஹசாரேவுக்கும் ஏற்பட்டிக்கும் என பாஜ தலைவர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக இயக்கம் நடத்திவரும் அன்னா ஹசாரேவுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அன்னா உண்ணாவிரதத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு ஆதரவு அளித்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆனால் ஆர்எஸ்எஸ் உடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என அன்னா மறுத்து வருகிறார். ஊழலுக்கு எதிராக யார் ஆதரவு கொடுத்தாலும் அதை ஏற்க தயாராக இருக்கிறோம். அந்த வகையில் ஆர்எஸ்எஸ் ஆதரவை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் உண்ணாவிரதம் மற்றும் இதர போராட்டங்களுக்கு அவர்களது உதவியை நாங்கள் ஒரு போதும் நாடியதில்லை என அன்னா விளக்கம் அளித்தார். இந்நிலையில் 19 நாள் மவுன விரதத்துக்கு பின்பு நேற்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு அன்னா பேட்டி அளித்தார்.
அப்போது, ஊழல் விவகாரத்தில் காங்கிரசுக்கும், பாஜவுக்கும் அதிக வித்தியாசமில்லை. ஒன்று பட்டதாரி என்றால் மற்றொன்று முதுகலை பட்டதாரி என்றார். அன்னாவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜ தலைவர் நிதின் கட்கரி கூறியதாவது: எங்களது ஆதரவு கிடைக்காமல் இருந்திருந்தால் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவுக்கு ஏற்பட்ட கதிதான் அன்னா ஹசாரேவுக்கும் ஏற்பட்டிருக்கும். அழைப்பு இல்லாமல் எந்த இடத்துக்கும் நாங்கள் செல்ல மாட்டோம். பாஜ குறித்தும், ஆர்எஸ்எஸ் குறித்தும் அன்னா கூறிய கருத்தில் வருத்தம் இல்லை. அன்னா நல்லவர். நல்ல நோக்கத்துக்காக போராடுகிறார். அவருக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்போம். இவ்வாறு கட்கரி கூறினார்.