புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தென்மாவட்டங்களில் மழை பெய்யும்!
சென்னை : வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தென் கடலோர பகுதியில் நிலை கொண்டு இருப்பதால், தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த காற்றழுத்தம் மேற்கு நோக்கி நகர்ந்தது. இந்நிலையில் வங்க கடலில் தென்கிழக்கு திசையில் இலங்கைக்கு அருகே நேற்று முன்தினம் 2வதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
இதன் காரணமாக தமிழகத்தில் நேற்றும் இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக மணல்மேல்குடியில் 90 மி.மீ. மழை பெய்துள்ளது. தென் கிழக்கு திசையில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, இப்போது தென் தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து வந்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யும். வட மாவட்டங்களை பொறுத்த வரையில் அநேக இடங்களில் மழை பெய்யும். சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.