பாலம் அறுந்து விபத்து : 6 பேர் உடல்கள் மீட்பு 25 பேர் கதி என்ன?
இடாநகர் : அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று மாலை கயிறு பாலம் அறுந்து விபத்து நேரிட்டது. இதில் ஆற்றுக்குள் விழுந்து பலியான 6 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 25 பேரின் கதி என்ன என்பது தெரியாததால் அவர்களும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு கேமங் மாவட்டத்தில் உள்ள செப்பா நகரையும், நியுசெப்பா நகரையும் இணைக்கும் தொங்கும் பாலம் உள்ளது. கேமங் நதியின் குறுக்கே அமைக்கப்பட்ட இந்த பாலம் 70 அடி நீளமும், 40 அடி அகலமும் கொண்டது. உணவாக பயன்படுத்தப்படும் ஒரு வகை பூச்சியை பிடிக்க 70க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் மற்றும் பெரியவர்கள் நேற்று மாலை இந்த பாலத்தில் திரண்டனர்.
அந்த பூச்சிகள் நீரோட்டத்தின் மீது பறப்பவை என்பதால் ஆற்று பாலத்தில் திரண்டனர். அப்போது திடீரென பாலம் அறுந்தது. இதனால் அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர். 2 பேர் மட்டும் நீந்தி கரையேறினர். மற்றவர்கள் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர். சிலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினரும், பொதுமக்களும் 29 பேரை மீட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இன்று காலை வரை 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 25 பேரின் கதி என்ன என்பது தெரியாமல் உள்ளது. ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், அவர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.