கு.நடராஜன் : தங்கத்தில் தாலிக்கொடி என்பது ஏழை பெண்களின் கனவு. அது இயலாதபோது கைகொடுக்கிறது கவரிங் தாலி செயின். இதை தயாரித்து விற்றால் லாபமும் உண்டு. மன நிறைவாகவும் இருக்கும் என்கிறார் கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த சுவாமிநாதன். அவர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் ஒர்க்ஷாப்பில் பணிபுரிந்தேன். வருமானம் போதவில்லை. கோவையில் எனது அண்ணன் கவரிங் தாலி செயின் தயாரித்து விற்று வந்தார். அவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். கவரிங் செய்ய கற்றுக்கொண்டேன். பின்னர் தனியாக தொழில் துவங்கினேன். எனது மனைவி, மகள் என குடும்பமே இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம். தாலிக்குகூட தங்கம் வாங்க இயலாத ஏழைகளுக்கு ஆறுதலாக விளங்குவது கவரிங் தாலி செயின்கள். தங்கத்தில் தாலிக்கொடி இருந்தாலும் அவசர செலவுக்காக அடகுவைக்கும்போதும், கவரிங் தாலிக் கொடி நகைகள் கை கொடுக் கின்றன. இவற்றை தயாரிப்பது கோவையில் குடிசை தொழி லாக நடந்து வருகின்றன.
இங்கு 40க்கும் மேற்பட்ட வீடுகளில் இத்தொழில் நடக்கிறது. கவரிங் தாலி செயினில் முறுக்கு மாடலையே அதிகம் அணிகின்றனர். அதை மட்டுமே செய்வதால் நிரந்தர கிராக்கி உள்ளது. இதை தயாரிக்க படிப்படியாக பல்வேறு வேலைகள் உள்ளன. அவற்றை கவனத்துடன் செய்தால் தரமானதாக உருவாக்க முடியும். கவரிங் செயின் தயாரிக்க முதல் நிலையில் இருந்து கடைசி நிலை வரை ஒரே இடத்தில் செய்யலாம் அல்லது ஒவ்வொரு நிலைக்கும் ஜாப்ஒர்க் செய்து கொடுக்க தனித்தனி ஆட்கள் இருக்கிறார்கள். அங்கு கொடுத்து, வாங்கியும் முழுமைப்படுத்தலாம். ஒரே இடத்தில் செய்தால் லாபம் அதிகம் கிடைக்கும். இத்தொழிலை செய்ய 6 மாதமாவது கவரிங் நகை பட்டறைகளில் பணிபுரிய வேண்டும். அப்போது தான் கற்றுக்கொள்ள முடியும். பின்னர் தயாரிப்பில் ஈடுபட்டால் லாபகரமாக இருக்கும். படங்கள் : வே.பேச்சிக்குமார்
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook