சென்னை மேயர் விழாவில் ஜெயலலிதா பங்கேற்கிறார் : உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவி ஏற்பு
சென்னை : தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், நாளை பதவி ஏற்கின்றனர். சென்னையில் மேயராக சைதை துரைசாமியும் 200 வார்டு கவுன்சிலர்களும் பதவி ஏற்கின்றனர். இதற்கான விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை கடந்த 21ம் தேதி நடந்தது. சென்னை உள்பட 10 மாநகராட்சி மேயர் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றது. மாநகராட்சி வார்டுகளிலும் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியது. மொத்தமுள்ள 125 நகராட்சிகளில் 89 இடங்களை அதிமுகவும் 23 நகராட்சிகளை திமுகவும் பிடித்துள்ளன. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், கவுன்சிலர்கள் நாளை பதவி ஏற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சென்னை மேயராக சைதை துரைசாமி பதவி ஏற்கிறார். அவருடன் 200 வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்கின்றனர். அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பதவி ஏற்பு விழாவில் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இதையொட்டி ரிப்பன் மாளிகை வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வரும் 29ம் தேதி துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி துணைத் தலைவர்கள், ஒன்றியக் குழு தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்களுக்கான தேர்தல் நடக்கிறது. இவர்களை கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.