புத்தக சுமையை குறைக்க ஐகோர்ட்டில் வழக்கு 4 வாரத்தில் முடிவு எடுக்க அரசுக்கு உத்தரவு
சென்னை : மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க வலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்தில் முடிவு எடுக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் வக்கீல் சத்யசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தக சுமையை குறைக்க வேண்டும் என பல்வேறு நிபுணர்கள் மத்திய, மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். பெற்றோர்களும் இதை வரவேற்றனர். புத்தக சுமையையும், மன உளைச்சலையும் குறைக்க மாணவர்களுக்கு அதிக ஹோம் ஒர்க் கொடுக்கக்கூடாது என மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த அனைவருக்கும் கல்வி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதை தமிழக பள்ளிகள் பின்பற்ற உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனு கொடுத்தேன். இந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் கோர்ட் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் விசாரித்து, மனுதாரரின் கோரிக்கையை கல்வித்துறை செயலாளர் 4 வாரத்துக்குள் பரிசீலிக்க உத்தரவிட்டார்.