வீட்டில் தனியாக வசித்த தாய், மகள் மர்ம சாவு திருவொற்றியூரில் பரபரப்பு
திருவொற்றியூர் : திருவொற்றியூர் பழைய கிணறு தெருவை சேர்ந்தவர் பாளையம்மாள் (86). இவரது கணவர், இறந்து விட்டார். மகன்கள் ரங்கநாதன், கோதண்டம், சுந்தர், ராஜ், அன்பழகன் ஆகியோர் திருமணமாகி அதே பகுதியில் தனித்தனியாக வசிக்கின்றனர். பாளையம்மாளின் மகள் ஜெயசுந்தரி (42), கணவரை பிரிந்து அம்மா வீட்டுக்கே வந்துவிட்டார். அவர் சற்று மனநிலை பாதித்தவர் என்று கூறப்படுகிறது. இருவரையும் மகன்கள் கவனித்து வந்தனர்.
இன்று காலை கோதண்டம் மனைவி பிரபாவதி, மாமியாரையும் நாத்தனாரையும் சாப்பிடுவதற்காக அழைக்க சென்றார். கதவு பூட்டாமல் சாத்தியிருந்தது. திறந்து உள்ளே சென்றார். அங்கு பாளையம்மாளும், ஜெயசுந்தரியும் உடல் முழுவதும் ரத்தக்கறை படிந்த நிலையில் படுக்கையில் பிணமாக கிடந்தனர். இதைப் பார்த்ததும் பிரபாவதி அலறித் துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
தகவல் கிடைத்ததும் திருவொற்றியூர் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியாக வசிப்பதால் விரக்தியில் தாயும், மகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது யாராவது அடித்து கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.