இந்தியா இங்கிலாந்து அணிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் 4வது ஒருநாள் போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 46.1 ஓவரில் 220 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பிரஸ்னன் 45, பீட்டர்சன் 41, ட்ரோட் 39, கெய்ஸ்விட்டர் 29, குக் 10 ரன் எடுத்தனர். அஸ்வின், ஆரோன் தலா 3, ரவீந்திர ஜடேஜா 2, வினய்குமார், பிரவீன்குமார் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். சுழற்பந்து வீச்சாளர்களும், கடைசி கட்டத்தில் ஆரோனும் பந்துவீச்சில் மிரட்டியதால் இங்கிலாந்து அணியை குறைந்த ரன்னுக்குள் சுருட்ட முடிந்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி கோக்லி, ரெய்னா அதிரடியால் 40.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 223 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கோக்லி 99 பந்தில் 11 பவுண்டரியுடன் 86 ரன்னும், ரெய்னா 62 பந்தில் 12 பவுண்டரியுடன் 80 ரன்னும் விளாசினர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டீவன்பின் 3, மீக்கர் 1 விக்கெட் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை ரெய்னா வென்றார். இந்த வெற்றியால் இந்தியா 40 என முன்னிலை வகிக்கிறது. வெற்றி குறித்து கேப்டன் டோனி கூறுகையில், 4 ஆட்டங்களில் வென்றது போலவே கடைசி ஆட்டத்திலும் வெல்ல முயற்சி செய்வோம். ஆரம்பத்தில் இங்கிலாந்து வேகமாக ரன்சேர்த்ததால் 270 ரன்களை கடப்பார்கள் என எதிர்பார்த் தோம். ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டு குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விட்டனர். ஆரோன் அதிவேகமாக பந்துவீசுகிறார். தொடர்ச்சியாக இதேபோன்று வீசினால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். பீல்டிங்கிலும் அணி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. இனிமேல் நான் பேட்டிங்கில் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளேன் என்றார். இங்கிலாந்து கேப்டன் குக் கூறுகையில், இந்திய ஆடுகளங்களில் ஜெயிக்க வேண்டுமென்றால் 280 ரன்களுக்கு மேலாவது எடுக்க வேண்டும். நாங்கள் எங்கள் திறமைக்கு ஏற்றபடி முழுமையாக ஆட வில்லை. கடைசி ஆட்டத்திலாவது வெற்றி பெற முயற்சிப்போம் என்றார். கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook