திருச்செந்தூர் கோயில் கந்தசஷ்டி விழா 25 இடங்களில் கண்காணிப்பு கேமரா
திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு 25 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் கூறினார். இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முக்கிய திருவிழாவான கந்தசஷ்டி வரும் 26ம் தேதி தீபாவளியன்று தொடங்குகிறது. 31ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. சஷ்டி திருவிழாவையொட்டி விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு இட வசதி செய்யப்பட்டுள்ளது. சஷ்டி திருவிழா யாகசாலை நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக 20 இடங்களில் பிளாஸ்மா டிவியும், அனைத்து விடுதிகளிலும் டிவி வைக்கப்படும். 31ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சிகளை காண 2 இடங்களில் எல்இடி டிவி வைக்கப்பட உள்ளது. அன்று நிகழ்ச்சிகள் நேரடியாக வர்ணனை செய்யப்படும். பக்தர்கள் வசதிக்காக கோயில் வளாகத்தில் 26 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்படும்.
மேலும் குளிப்பறை, கழிப்பறை வசதிகள் போதிய அளவில் செய்யப்பட்டுள்ளன. சஷ்டி திருவிழாவில் 6 லட்சம் பக்தர் கலந்து கொள்வதால் கூடுதலாக 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். கோயில் வளாகத்திலும், கடற்கரை மற்றும் பஸ்நிலையம் பகுதிகளில் 25 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் திருடர்கள் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டம் கண்காணிக்கபட்டு பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் 10 இடங்களில் உயர் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.