பாட்னா: பீகார் மாநிலம் தரவுந்தா சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு அமோக வெற்றியை தேடி தந்த வாக்காளர்களுக்கு முதல்வர் நிதிஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார். தரவுந்தா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜக்மாட்டோ தேவி கடந்த ஜூன் மாதம் மரணமடைந்தார். இதை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஜக்மட்டோ தேவியின் மகள் கவிதா சிங் நிறுத்தப்பட்டார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் பரமேஷ்வர் சிங்கும், காங்கிரஸ் சார்பில் கலிகா சரண் சிங்கும் போட்டியிட்டனர். இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் கவிதா தேவி சுமார் 50 ஆயிரம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை ராஷ்ட்ரிய ஜனதா தளமும், 3ம் இடத்தை காங்கிரசும் பிடித்தன. ஐக்கிய ஜனதா தளத்துக்கு அமோக வெற்றி தேடி தந்த வாக்காளர்களுக்கு முதல்வர் நிதிஷ்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
வாக்காளர்களை திசை திருப்ப எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சித்தன. ஆனால் அவர்களுக்கு மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர் என நிதிஷ்குமார் கூறியுள்ளார். பீகாரைப் போல மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் அரியானாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அரியானா மாநிலம் ஹிசார் தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் டெபாசிட் இழந்துள்ளது. ஆந்திராவில் தெலங்கானா பகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா, பா.ஜ. கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook