சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலில் பல இடங்களில் கள்ள ஓட்டு போடுவதாக புகார்கள் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பழவந்தாங்கலில் திமுக, அதிமுகவினர் மீது தடியடி நடத்தினர். திருவிக நகரில் சிலர் ரகளையில் ஈடுபட்டதால் கடைகள் அடைக்கப்பட்டன. ஆயிரம் விளக்கு பகுதியில் அதிமுக பெண் பிரமுகர் கத்தியால் குத்தப்பட்டார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் காலை 11 மணிக்கு மேல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல இடங்களில் அதிமுகவினர் பூத்களை கைப்பற்றி கள்ள ஓட்டு போடுவதாக புகார்கள் எழுந்தன.
திருவிக நகர் 76-வது வார்டு சி.எஸ்.நகர் பார்க் சமுதாய நல கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த 1262, 1263, 1271 ஆகிய பூத்களில் 20 பேர் கொண்ட கும்பல் திடீரென்று புகுந்து, ஓட்டு போட காத்திருந்த பொதுமக்களை விரட்டியடித்தது. பயந்துபோன வாக்காளர்கள், சிதறி ஓடினர். அங்கு பரபரப்பு ஏற்பட்டதால் கடைகள் அடைக்கப்பட்டன. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் எதையும் கண்டுகொள்ளவில்லை. வாக்காளர்களை விரட்டியடித்த கும்பல் கள்ள ஓட்டு போட்டதாக எதிர்க்கட்சிகளின் ஏஜென்ட்கள் புகார் கூறினர். இதைக் கண்டித்து வேட்பாளர்களும், முகவர்களும் அங்கிருந்து வெளியேறினர்.
அவர்கள் கூறும்போது, ‘‘மேயருக்கான ஓட்டு 100 மட்டுமே பதிவாகியுள்ளது. ஆனால், கவுன்சிலருக்கு 142 ஓட்டுகள் பதிவாகியுள்ளது. அப்படி என்றால் கள்ள ஓட்டு தானே பதிவாகியுள்ளது. இதனால் நாங்கள் வெளியேறி விட்டோம்’’ என்றனர். ஆயிரம்விளக்கு தொகுதி மக்கீஸ் கார்டன் பகுதியில் கள்ள ஓட்டு போடுவதை தடுத்த அதிமுகவை சேர்ந்த குட்டி (எ) சரஸ்வதி (40) என்பவரை சிலர் கத்தியால் குத்தினர். அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எழும்பூரில் எத்திராஜ் கல்லூரி, டான்போஸ்கோ பள்ளிகளில் 2 கார்களில் வந்த சிலர், கள்ள ஓட்டு போட முயன்றனர். இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததும், அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது.
தி.நகர் தொகுதி 130-வது வார்டில் உள்ள ஜானகி ராமச்சந்திரன் மெட்ரிக் பள்ளி வாக்குச்சாவடிக்கு பகல் 12 மணியளவில் அதிமுக எம்எல்ஏ கலைராஜன், தனது ஆதரவாளர்களுடன் வந்தார். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என திமுக வேட்பாளர் ஆனந்தன், போலீசாரிடம் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதிக்கொள்ளும் சூழல் உருனானது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர். பழவந்தாங்கல் 162-வது வார்டில் திமுக பிரமுகர் ஒருவர் நேற்று முன்தினம் கடத்தப்பட்டார்.
இதையடுத்து அந்த வார்டு வாக்குச்சாவடியில் மத்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பழவந்தாங்கல் கே.கே.நகர் பகுதி வாக்குச்சாவடியில் அதிமுகவினர் இரட்டை சிலை சின்னத்தை காட்டி வாக்காளர்களிடம் பிரசாரம் செய்ததாக திமுகவினர் புகார் கூறினர். இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் நிலை உருவானதால் அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். கோடம்பாக்கம் ராம் தியேட்டர் எதிரே உள்ள மாநகராட்சி பள்ளிக்கு 20-க்கும் அதிகமானவர்கள் கும்பலாக வந்தனர்.
போலீசார் உள்ளே அனுமதிக்காததால் அவர்கள் பள்ளி முன்பு முகாமிட்டுள்ளனர்.தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள பூத்துக்கு முன்னாள் அமைச்சர் வளர்மதி, 50 பேருடன் வந்தார். திமுக, தேமுதிக, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அங்கு பதற்றமான நிலை உருவானதால் 30 நிமிடம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. வளர்மதி புறப்பட்டு சென்றதும் மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.
திருவொற்றியூர் 5-வது வார்டில் அஞ்சப்பன் என்ற அதிமுக பிரமுகர் கார் மீது மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். ராமகிருஷ்ணா நகரில் உள்ள சகாயமாதா மெட்ரிக் பள்ளியில் அதிமுக, திமுகவினர் கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் ஓட்டு போட வந்தவர்கள் திரும்பிச் சென்றனர். அங்கு இணை கமிஷனர் ஜெயராம், துணை கமிஷனர் சந்தோஷ்குமார் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். அயோத்திகுப்பம் லேடி வெலிங்டன் பள்ளியில் கள்ள ஓட்டு போட வந்ததாக 3 பேரை போலீசார் பிடித்துச் சென்றனர். அவர்களை விடுவிக்கக் கோரி 50 பெண்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook