உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு : கருணாநிதி, ஸ்டாலின் பேட்டி!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி இன்று காலை 10 மணிக்கு கோபாலபுரம் சாரதா மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு செய்தார். அவருடன் மனைவி தயாளு அம்மாள், அமிர்தம் ஆகியோர் வந்தனர். காலை 10.5 மணிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா ஆகியோருடன் வந்து ஓட்டு போட்டார். காலை 8.30 மணிக்கு செல்வி, செல்வம் ஆகியோர் ஓட்டு போட்டனர். ஓட்டுபோட்ட பின், கருணாநிதி அளித்த பேட்டி:
பெரும்பாலான இடங்களில் வெப் கேமரா பொருத்தப்படவில்லை என புகார் வந்துள்ளதே?
இந்த ஆட்சியில் இவையெல்லாம் நடப்பதில் பிரச்னை இல்லை.
மின்னணு இயந்திரங்கள் பல இடங்களில் வேலை செய்யவில்லை என்கிறார்கள். தேர்தல் முறைகேடு நடப்பதாகவும் கூறுகிறார்களா?
ஆட்சியே சரியாக நடக்கவில்லை என்னும்போது இவை எப்படி சரியாக வேலை செய்யும்?
உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மந்தமாக இருக்கிறதே?
சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலுடன் உள்ளாட்சி மன்ற தேர்தலை ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
உள்ளாட்சி தேர்தலில் பரவலாக முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறதே?
முறைகேடு நடக்கும் இடங்களில் மறு தேர்தல் நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைப்போம்.
பல இடங்களில் வெப் கேமரா பொருத்தப்படவில்லை என புகார் வந்துள்ளதே?
உயர் நீதிமன்ற உத்தரவு சரியாக அமல்படுத்தப்படவில்லை. 85 சதவீத இடங்களில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. பாதுகாப்பு அளிக்கப்படவில்லை. இதனால் திமுக உள்ளிட்ட அனைத்து வக்கீல்களும் சேர்ந்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து மனு தர உள்ளனர். தேவைப்பட்டால் வழக்கு தொடருவோம்.