தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்ததில் தீயில் கருகிய தம்பதி பரிதாபமாக இறந்தனர். மகன், மகள் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சென்னை ராயபுரம் மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் சுனில் லால் (40). பேல் பூரி வியாபாரி. இவரது மனைவி அனிதா (36). மஞ்சுளா (16), பாலா (15) ஆகிய மகள், மகன் உள்ளனர். நேற்று காலை அனிதா பேல் பூரி தயாரிக்க ஸ்டவ்வை பற்ற வைத்துள்ளார்.
அப்போது கேஸ் கசிவால் ஸ்டவ் தீப்பிடித்தது. இதில் அவரது உடலில் தீப்பற்றியது. மனைவி அலறல் சத்தம் கேட்டு, சுனில் லால் சமையல் அறைக்கு விரைந்தார். மனைவியை காப்பாற்ற முயன்றார். அவரது உடையிலும் தீப்பற்றிக் கொண்டது. இதை அறிந்ததும் குழந்தைகள் மஞ்சுளா, பாலா ஆகியோர் தாய், தந்தையை காப்பாற்ற முயன்றனர். அப்போது சிலிண்டர் வெடித்து வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் குடும்பத்தினர் அனைவரும் தீயில் சிக்கிக் கொண்டனர்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். உயிருக்கு போராடியவர்களை மீட்டு சென்னை கீழ்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுனில் லால், மனைவி அனிதா ஆகியோர் இறந்தனர். காயம் அடைந்த மஞ்சுளா, பாலா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புகாரின் பேரில் ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook