தாம்பரம்: பல்லாவரம் கோயிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்வது போல் வந்த ஆசாமி, 15 பவுன் நகை களை சுருட்டி சென்றார். அவரையும் அவருடன் வந்த சிறுமியையும் போலீசார் தேடி வருகின்றனர். பல்லாவரம் யாசிங் கான் தெருவில் ஸ்ரீதேவி பெரிய பாளையத்தம்மன் கோயில் உள்ளது. இது 100 ஆண்டு பழமையான கோயில். ஆடி, மார்கழி, அமாவாசை, மற்றும் வெள்ளிக்கிழமையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இங்கு செந்தாமரை (70) பூசாரியாக உள்ளார். கோயில் வளாகத்தில் இவரது வீடு உள்ளது. தினமும் காலையில் கோயில் நடையை திறந்து விடுவார்.
வெள்ளிக் கிழமையான இன்று காலை அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணியளவில் 45 வயதுள்ள ஆண், 15 வயதுள்ள சிறுமியுடன் கோயிலுக்கு வந்தார். சிறுமி சாமி கும்பிட்டு கொண்டு இருந்தார். அந்த நபர் கோயில் வாசலில் நின்றார். அவர் பூசாரியை கூப்பிட்டு, அபிஷேகம் செய்ய வேண்டும் என்றார். அபிஷேகம் செய்ய முன்கூட்டியே பெயர் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே பலர் பெயர் கொடுத்துள்ளதால் இன்னும் 2 வாரமாகும் என்று பூசாரி தெரிவித் துள்ளார்.
அந்த நேரத்தில் சாமி நகைகளை சுருட்டி பையில் வைத்து கொண்ட சிறுமி அங்கிருந்து நைசாக நழுவினாள். அதன்பின் மர்ம ஆசாமியும் வெளியில் சென்றார். ஆசாமியுடன் பேசிய பின், பூசாரி செந்தாமரை கோயிலுக்குள் சென்றார். அங்கு பூக்கள் சிதறி கிடந்தன. அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த காசி மாலை, செயின், டாலர் உள்ளிட்ட 15 சவரன் நகைகளை காணாமல் திடுக்கிட்டார். பதறியபடி வெளியே ஓடி வந்தார்.
அதற்குள் இருவரும் மாயமாகி விட்டனர். இதை அறிந்த தர்மகர்த்தா முத்துக்கிருஷ்ணன் விரைந்து வந்தார். அவர் போலீசில் புகார் செய்தார். இந்த கோயில் அப்பகுதி மக்களுக்கு குல தெய்வம் என்பதால் பக்தர்கள் திரண்டனர். பெரும் பரபரப்பு நிலவியது. பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஆசாமியையும், சிறுமியையும் தேடி வருகின்றனர். அவர்கள் தந்தை, மகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook