ஷெரீப் சொத்து விடுவிக்க லாகூர் கோர்ட் உத்தரவு!
லாகூர்: பாகிஸ்தான் பிரதமராக நவாஷ் ஷெரீப் இருந்த போது, ராணுவ புரட்சி மூலம் பெர்வேஸ் முஷாரப் ஆட்சியை பிடித்தார். அதிபராக முஷாரப் பதவியேற்ற பிறகு ஷெரீப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. முஷாரப்பை கொல்ல சதி செய்த வழக்கில் ஷெரீப்புக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஷெரீப் அவரது குடும்பத்தாரின் சொத்துக்கள் கடந்த 2001ம் ஆண்டு முடக்கப்பட்டன.
ஊழல் தடுப்புத் துறை மற்றும் தீவிரவாத தடுப்புத் துறையினர் தொடர்ந்த பல வழக்குகளில் விதிக்கப்பட்ட தண்டனையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. ஆனால், சொத்துக்களை விடுவிக்கவில்லை. பத்து கோடி ரூபாய் ஷேர் சர்டிபிகேட், 11 கோடி பத்திரங்கள், சர்க்கரை ஆலை, இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனம், ஷிப்பிங் கார்ப்பரேஷன் உட்பட பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை விடுவிக்க கோரி ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை லாகூர் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மன்சூர் அலி ஷா, முகமது காலித் முகமது கான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளித்தது. அதில், ஷெரீப், அவரது குடும்பத்தாரின் எல்லா சொத்துக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஊழல் தடுப்பு துறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.