3 பேருக்கு தூக்கு : மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்!
சென்னை: பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, இருபதாண்டு காலத்துக்கு மேலாக சிறையிலே வைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
அதற்காக தமிழக அரசு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என்று அனைவரும் கேட்டு கொண்டு பல நாட்களாகிவிட்டன.
எனினும், தமிழக அரசு அதற்கு முன்வராத நிலையில், மத்திய அரசாவது இவர்கள் மூவரையும் சிறையில் இருந்து விடுவிப்பதற்கான முயற்சிகளிலே ஈடுபட்டு உதவ வேண்டும் என்று பிரதமரையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவி சோனியா காந்தியையும் திமுக சார்பில் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.