சென்னை: உள்ளாட்சித் தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து அமைப்பு சாரா நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. தமிழக உள்ளாட்சிகளுக்கு 17, 19ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. ஏற்கனவே வடக்கு மண்டலத்தில் உள்ள 7 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் சோ.அய்யர் ஆலோசனை நடத்தினார்.
நேற்று காலை மாநில தேர்தல் அலுவலகத்தில் அமைப்பு சாரா நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், கேட்டலிஸ்ட் ட்ரஸ்ட், பாடம் அமைப்பு, மகளிர் மேம்பாட்டுக்கான அறக்கட்டளை, கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பு, தமிழ்நாடு அமைப்பு ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் அம்புரோஸ், நாராயணன், சுப்பிரமணி, பானுகுமார், தேவசகாயம், சண்முக வேலாயுதம் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, சென்னை மாநகராட்சி வார்டு பகுதிகள் மாற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்ளும் வகையில் வாக்களிக்கும் பகுதி விவரங்களை முன்னதாகவே விளம்பரப்படுத்த வேண்டும் என இவர்கள் கேட்டுக் கொண்டனர். உடனடியாக சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு விளம்பரங்களை வெளியிடுமாறு கேட்டுக் கொண்டார். அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த, மக்கள் சிறிதும் பயமின்றி வாக்களிக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் ஆணையம் எடுத்து வருகிறது.
தேர்தலை சீர்குலைப்பவர்கள் மீது எந்த பாகுபாடுமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உள்ளாட்சித் தேர்தல், இனிவரும் தேர்தல்களுக்கு ஒரு முன் உதாரணமாக அமையும் என்று அய்யர் கூறினார். மாநில தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப் பதிவு முறை நடைமுறைப்படுத்துதல், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல், புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப் வழங்குவது போன்ற நடவடிக்கைகள் எடுத்திருப்பதற்கு அமைப்பு சாரா நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தேர்தல் பார்வையாளர்கள் மட்டுமின்றி சமூகத்தின் மீதும், தேர்தல் சுதந்திரமாக நடக்க வேண்டும் என விரும்பும் ஆர்வலர்கள் வாக்குப்பதிவு அன்றும், வாக்கு எண்ணிக்கை அன்றும் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை மாநில தேர்தல் ஆணையத்துக்கு உடனுக்குடன் தெரிவித்தால் தேர்தல் சுமூகமாக நடத்த உதவியாய் இருக்கும் என்று தேர்தல் ஆணையர் கேட்டுக் கொண்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook