செங்கல்பட்டு: இனி அனைத்து தேர்தலிலும் பாமக தனித்துதான் போட்டியிடும். இந்த கொள்கையிலிருந்து மாறாது என்று மறைமலைநகரில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ராமதாஸ் கூறினார். மறைமலைநகர் நகராட்சி தலைவர் பதவிக்கு பாமக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ மூர்த்திக்கு ஆதரவு தெரிவித்து, கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மறைமலைநகர் நகராட்சியில் போட்டியிடும் கவுன்சிலர்கள் அறிமுக கூட்டம் மறைமலைநகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: மறைமலைநகர் நகராட்சியில் கடந்த 5 ஆண்டு காலமாக பாமக சார்பில் நகராட்சி தலைவராக இருந்தார் சசிகலா ஆறுமுகம். சிறப்பாக செயல்பட்டார். தற்போது போட்டியிடும் மூர்த்தியை தேர்ந்தெடுத்தால் இந்தியாவிலேயே சிறந்த நகராட்சியாக மறைமலைநகரை மாற்றி காட்டுவார். இந்த உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவது பற்றி முதன் முதலாக பாமகதான் அறிவித்தது. இதை திராவிட கட்சிகளும் பின்பற்றுகிறது. இனி சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பாமக தனித்துதான் போட்டியிடும். இந்த கொள்கையிலிருந்து மாறாது. எனவே மக்கள், பாமகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில் நகராட்சி தலைவருக்கான வேட்பாளர் மூர்த்தி பேசுகையில், ÔÔநடைபாதையில் மின்விளக்கு, குடிநீர், பூங்கா வசதி செய்து கொடுப்பேன். அரசு திட்டங்களுடன் கிராம மக்களுக்கு அரசு தொகுப்பு வீடுகளை பெற்று தருவேன்ÕÕ என்றார். கூட்டத்தில், மாநில துணை பொதுச் செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம், மாவட்ட செயலாளர் வாசு, நகர செயலாளர் கருணாநிதி, நகராட்சி தலைவர் சசிகலா ஆறுமுகம், கவுன்சிலர் ரகுபதி, நகர இளைஞரணி செயலாளர் சிவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook