ஹசன் அலி மனைவிக்கு இடைக்கால முன்ஜாமீன்!
மும்பை: கருப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக கைதாகியுள்ளார் புனே தொழில் அதிபர் ஹசன் அலி. இவரது மனைவிக்கு சிறப்பு நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு கருப்பு பணம் பதுக்கியிருப்பதாக புனே தொழில் அதிபர் ஹசன் அலியை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஹசன் அலியின் மனைவி ரீமா கானிடம் விசாரணை நடத்த அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு ரீமா கான் பதில் அளிக்கவில்லை. குறிப்பிட்ட தேதியில் அமலாக்கப்பிரிவு முன்பு ஆஜராகவும் இல்லை. அமலாக்கப்பிரிவு சம்மனை எதிர்த்து சிறப்பு நீதிமன்றத்தில் ரீமா கான் வழக்கு தொடர்ந்தார். இது கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சம்மனுக்கு ஆஜராகாத குற்றத்துக்காக ரீமா கான் மீது புதிய வழக்கு ஒன்றை அமலாக்கப்பிரிவு பதிவு செய்தது. இதையடுத்து எந்த நேரமும் ரீமா கான் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் முன்ஜாமீன் கோரி சிறப்பு கோர்ட்டில் ரீமா கான் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்றம், ரீமாவுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.