புதுடெல்லி: நாட்டில் சாலை விபத்துகளால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது என்று திட்ட கமிஷன் உறுப்பினர் தெரிவித்துள்ளார்.சர்வதேச சாலை கூட்டமைப்பு சார்பில் சாலை விபத்து குறித்த கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் திட்ட கமிஷன் உறுப்பினர் பி.கே.சதுர்வேதி பேசியதாவது: சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை ஆய்வு குழு நடத்திய கணக்கெடுப்பின்படி, சாலை விபத்துகளில், கடந்த 2009ம் ஆண்டு 1 லட்சத்து 25 ஆயிரத்து 660 பேர் இறந்துள்ளனர். 5 லட்சத்து 15 ஆயிரத்து 458 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மத்திய சுகாதார துறை மற்றும் நெடுஞ்சாலை துறை இணைந்து ஆய்வு நடத்தி, 2010ம் ஆண்டில் சாலை விபத்துகளால் உயிரிழந்தோர் மற்றும் காயம் அடைந்தோரை கணக்கிட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் விபத்துகளில் இறந்துள்ளனர். நாட்டில் சாலை விபத்துகளால் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. சாலை உயிரிழப்பு எண்ணிக்கையை 2020ம் ஆண்டில் பாதியாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கட்டிடம் கட்டும் போதும், சாலைகள் அமைக்கும் போதும், பாதசாரிகளுக்கான வசதிகளையும் செய்ய வேண்டும்.
நெடுஞ்சாலைகளில் கூடுதலாக அவசர சிகிச்சை மையங்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு சதுர்வேதி கூறினார். சர்வதேச சாலை கூட்டமைப்பின் தலைவர் கபிலா கூறுகையில், ‘சாலை விபத்துகள் பெரும் சவாலாக உள்ளன. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடியை நாடு இழக்கிறது. ஆனால், இந்த தொகையில் 10 சதவீதத்தை கூட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதில்லை என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook