ஆறு, அருவி, குளம், குட்டைகளை பார்த்த உடன் குளியல் போட விரும்புவது அனைவரின் இயல்பு. ஆனால் மேட்டூர் அணையில் ‘மட்டம்’ என்ற இடத்தை பார்த்ததும் பீதியுடன் நகர்கிறார்கள் அப்பகுதியினர். ‘‘இங்கு குளித்தால் அதோ கதி’’ என்று அச்சத்தோடு சொல்கிறார்கள். மேட்டூர் அணையில் காவிரி கால்வாய் ஓரத்தில் அணைக்கட்டு முனியப்பன் கோயில் உள்ளது. காவிரி கால்வாய் டெல்டா பாசன கால்வாயுடன் சேரும் பகுதியில் இருக்கும் இடம்தான் ‘மட்டம்’. இப்பகுதியில் குளிப்பவர்களின் உயிரை ரத்த வெறி பிடித்த ஆவிகள் காவு வாங்குவதாக பீதியுடன் சொல்கின்றனர் மேட்டூர்வாசிகள். மட்டத்தில் குளிப்பவர்கள் தண்ணீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஆண்டுக்கு 20 பேராவது உயிரை பறிகொடுப்பதாகவும் கூறப்படுகிறது. காவிரி கால்வாயில் இருந்து கொட்டும் தண்ணீர், பெரிய பள்ளத்தில் விழுந்து நுரையுடன் பொங்கி பாய்ந்தோடுகிறது. அந்த இடத்தில் நீர் சுழல் இருக்கும். இந்த சுழலில்தான் கெட்ட ஆவிகள் குடிகொண்டிருப்பதாக சொல்கின்றனர் மேட்டூர் மீனவர்கள். இதனால் உள்ளூர் மக்கள் மட்டத்தில் குளிப்பதே இல்லை. விஷயம் தெரியாமல் இறங்கி குளிக்கும் வெளியூர்க்காரர்கள்தான் ஆவிகளின் பிடியில் சிக்கி இறப்பதாக திகிலூட்டும் விஷயம் சொல்லப்படுகிறது. மட்டத்தில் யாராவது சிக்கி விட்டால், உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் ஆவி பீதி காரணமாக அவர்கள்கூட உடனே தண்ணீரில் இறங்குவதில்லையாம். காவேரி பாலத்தை சேர்ந்த ஆறுமுகம் (65) என்பவரைத்தான் அழைத்து வருவார்கள். அவர் துணிச்சலோடு தண்ணீரில் இறங்கி, இறப்பவர்களின் உடல்களை மீட்பதாக சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள். இதுபற்றி ஆறுமுகத்திடம் கேட்டபோது, ‘‘இதுவரை 160 பிணங்களை மீட்டிருக்கேன். 10 வருசத்துக்கு முன்னால, பிள்ளைகளோடு இங்க வந்திருந்தேன். மட்டத்துல குளிச்சப்போ திடீர்னு தண்ணியில சலசலப்பு சத்தம். நேரம் ஆகஆக சத்தம் அதிகமாச்சு. என்னானு பாத்தபோ, வெள்ள வேட்டி, சட்டை போட்ட உருவம் ஒண்ணு, தண்ணியில இருந்து கிளம்பி போச்சு. திக்குனு ஆகிடுச்சு. அமாவாசை, பவுர்ணமிக்கு இங்க ஆவிங்க அட்டகாசம் அதிகமா இருக்கும். அப்போ குளிச்சு மாட்டிக்கிறவங்கள என்ன செஞ்சாலும் காப்பாத்த முடியாது. ஒருநாள் நான் எவ்வளவோ தடுத்தும் 3 பேரு குளிக்க போனாங்க. ஆவிங்ககிட்ட மாட்டிக்கிட்டாங்க. 2 பேர காப்பாத்துனேன். ஒருத்தர் அநியாயமா செத்துட்டார். அப்படி சாகுறவங்க ஆன்மாவும் இங்கேயே சுத்திட்டு இருக்கும். இதுக்கெல்லாம் பரிகாரம் செஞ்சாதான் ஆவிங்க சேட்டை குறையும். எனக்கும் கொஞ்சம் கிலியாகத்தான் இருக்கும். குவாட்டரை இறக்கிட்டுதான் உள்ளே இறங்குவேன்’’ என்று விலாவாரியாக கூறி முடித்தார். மட்டத்தில் குளிக்கும்போது, திடீரென கன்னத்தில் பளார் என்று யாரோ அடிப்பதாகவும், மர்மமான சத்தங்கள் கேட்பதாகவும் பலர் சொல்கின்றனர். அப்படி கன்னத்தில் அடி வாங்கியவர்களில் சிலர் வீட்டில் போய் சுருண்டு விழுந்து இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன என்று சொல்லி பயமுறுத்துகிறார்கள் உள்ளூர் மக்கள்.
பொதுவாக ஆற்று நீரில் சுழல் இருக்கும் பகுதிகளிலும், புதைமணல் இருக்கும் இடங்களிலும் குளிக்ககூடாது.வெளியூர் வாசிகளுக்கு இந்த விவரம் தெரியாததால், அவர்கள் ஆபத்தில் மாட்டி கொள்கிறார்கள்.தண்ணீருக்குள் இருந்து எந்த வெள்ளை சட்டை போட்ட ஜந்தும் கிளம்பி போக வாய்ப்பில்லை. இது, அப்பட்டமான கட்டு கதை. தண்ணீரில் மூழ்கி, பிணங்களை தேடுபவர் குவார்ட்டர் சரக்கு ஏத்துவது தனது பயத்தை மறைக்கவும் அசட்டு துணிச்சலுக்கும் தான்.
vignesh - vanavasi
3/19/2012 -- 10:12:54
இந்த சம்பவம் சோதனை செய்து பார்க்கவேண்டும் அதற்கு யாராவது முன் வந்தால் நானும் உங்களோடு தொடர்புகொள விரும்பிகிறேன்