சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் 9 மாவட்ட திமுக செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புதிதாக பிரிக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த 9 மாவட்டங்களுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அதே நேரத்தில் ஆளுங்கட்சியான திமுக தேர்தலை சந்திக்கும் வகையில் தனது பணிகளை முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
சுமார் 1 மணி நேரம் நடந்தது. கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பொருளாளர் டிஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் 9 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொணடனர். கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றி வியூகங்களை வகுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. ஊரக உள்ளாட்சி பகுதிகளில் வேட்பாளர்களாக யார், யார் நிறுத்துவது என்பது குறித்தும், ஊரக பகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து நிறைவேற்றப்பட்ட திட்டங்களை வீடு, வீடாக மக்களிடம் கொண்டு சென்று விளக்க வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தல் போன்றே இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிகபட்சமான இடங்களில் வெற்றி பெற வேண்டும், உள்ளாட்சி தேர்தலை எதிர்கெள்ளும் வகையில் கட்சியினர் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.