திருப்பூர்: டீசல் விலையை குறைக்க வேண்டும். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை சீரமைக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18ம் தேதி நள்ளிரவு முதல் தென்மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, புதுவை, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய 6 மாநிலங்களிலும் 26 லட்சம் லாரிகள் கடந்த 5 நாட்களாக ஓடவில்லை.
நேற்று மத்திய அரசுடன் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால் நேற்று இரவு ஸ்டிரைக் வாபஸ் ஆனது. இதையடுத்து சரக்குகளை அனுப்பும் பணி தமிழகமெங்கும் முழுவீச்சில் நடந்து வருகிறது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க மாநில இணை செயலாளர் துரைசாமி கூறுகையில், ‘‘ஈரோடு மாவட்டத்தில் தேங்கி கிடந்த ரூ.175 கோடி மதிப்பிலான மஞ்சள், ஜவுளி, சர்க்கரை, கோழித்தீவனம், கால்நடைத்தீவனம், எண்ணெய், அரிசி, கறிக்கோழி, முட்டைகள் போன்றவை அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் 2 நாட்களில் தேங்கி கிடந்த பொருட்கள் அனுப்பி முடிக்கப்பட்டு நிலைமை சீரடையும்’’ என்றார்.
நீலகிரியில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தியான, ஏல மையங்களில் விற்பனையான பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலைத்தூள் வெளிமாநிலங்களுக்கு செல்லவில்லை. ஸ்டிரைக் வாபசானதால் நேற்று இரவு முதல் தேயிலை தூள் பண்டல்கள் லாரிகள் மூலம் கொண்டுசெல்வது தொடங்கியது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook