340 கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய்கிரகத்தில் உயிரினங்கள்!
பாரிஸ்: செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான மிக நுண்ணிய படிம ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கிடைக்கப் பெற்றுள்ள இந்தப் படிமங்கள் 340 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது என்று முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் இந்த அரிய தகவல் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள பில்பராவில் இருந்து மிகவும் தொலைவான பகுதியில் உள்ளது ஸ்ட்ரெலே பூல் என்ற வறண்ட குளம். இங்குள்ள பழமையான படிமப் பாறைகளில் ஒட்டிய நிலையில் ஏராளமாக இருந்த பாசிகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
இவற்றில் மைக்ரோப்ஸ் எனப்படும் மிக நுண்ணிய பாக்டீரியாக்கள் படிமங்களாக இருந்ததும் அவற்றில் வித்தியாசமான பாறைகளின் துகள்கள் ஒட்டியிருந்ததும் தெரியவந்தது. இவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளின் துகள்கள் இதில் ஒட்டியிருந்தது தெரியவந்தது. பில்பரா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் செவ்வாய்கிரகத்தில் உள்ள வேறு சில பாறைத்துகள்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த 2002ல் மற்றொரு ஆராய்ச்சி குழுவினர் இப்பகுதிக்கு அருகில் இதேபோன்ற பாக்டீரியா படிமங்களை கண்டெடுத்தது குறிப்பிடத்தக்கது.
அதிநவீன தொழில்நுட்ப பரிசோதனை களான எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி மற்றும் ஸ்பெக்ரோஸ்கோபி மூலம் இவை பரிசோதிக்கப்பட்டது. இதன் மூலம் இவை சல்பர் ரசாயனத்தை நம்பி உயிர்வாழும் தாவரவகை பாக்டீரியாக்கள் என்றும், இவை உயிர்வாழ பிராணவாயு தேவையில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்த தொடர் ஆய்வில் மேலும் அரிய தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.