வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு: தயாரிப்பாளர்களுக்கு 10 நல திட்டங்கள் திருட்டு விசிடி ஒழிக்க குழு - இலவச வீடு - ரூ.5 லட்சம் காப்பீடு
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரும் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் போட்டியிடும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்னேற்ற முன்னணி சார்பில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. மற்றொரு அணியாக தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த டி.சிவா உள்ளிட்ட அவரது அணியினர் முன்னேற்ற முன்னணிக்கு நேரில் வந்து ஆதரவு தெரிவித்து போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன் அவர்கள் அனைவரும் அறிமுக கூட்டத்தில் பங்கேற்று தங்கள் ஆதரவை உறுதி செய்தனர். முன்னேற்ற முன்னணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராதாகிருஷ்ணன் பேசும்போது,’சங்க உறுப்பினர் மகள் திருமணத்துக்கு இதுவரை வழங்கப்பட்ட 1 லட்சம் உதவித்தொகை ஒன்றேகால் லட்சமாக உயர்த்தப்படும்.
மகன் திருமணத்துக்கு வழங்கப்பட்ட 50 ஆயிரம் 75 ஆயிரமாக உயர்த்தப்படும். பிள்ளைகள் கல்லூரி படிப்புக்கு கல்வி உதவித்தொகை 40 ஆயிரம், பள்ளி படிப்புக்கு 20 ஆயிரம் வழங்கப்படும். 60 வயது கடந்த உறுப்பினர்களுக்கு இதுவரை ரூ. 5ஆயிரமாக வழங்கிய உரிமைத் தொகை இனி மாதம்தோறும் 12 ஆயிரமாக உயர்த்தப்படும். சங்க நிரந்தர உறுப்பினர் காலமானால் அவரது குடும்பத்தினரிடம் உதவித்தொகை 75 ஆயிரம் தரப்படும். திருட்டு வீடியோவுக்கு எதிராக அவற்றை கண்காணிக்கும் பறக்கும்படை சிறப்பு குழு அமைக்கப்படும். அக்குழு தியேட்டர்களை கண்காணித்து திருட்டு வீடியோ வெளியாவது தடுக்கப்படும்’ என்பது உள்ளிட்ட 10 நல திட்டங்களை ராதாகிருஷ்ணன் வெளியிட்டதுடன், ரூ.5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு, சிறுபட தயாரிப்பாளர்களுக்கு படம் வெளியான நாளிலிருந்து விளம்பர செலவுகளை சங்கமே ஏற்கும்,
ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஆயிரம் சதுர அடி அளவில் பிளாட் இலவசமாக கிடைக்க வழி செய்யப்படும், 5 லட்சம் ஆயுள் காப்பீடு, சிறு பட தயாரிப்பாளர்களுக்கு தணிக்கை சான்று பெற்றுத்தர தனிக்குழு, படத்தை கியூப் உள்ளிட்டவற்றில் திரையிடுவதற்காக ஒரு காட்சிக்கு 250 ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்தினால்போதும் என்ற நிலையை பேசி உறுதி செய்யப்படும் என 10 முக்கிய வாக்குறுதிகளும் அளித்தார். கவுரவ செயலாளராக போட்டியிடும் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் பேசும்போது, ‘தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடிகர் சங்கம் ஊடுருவ இடம் இல்லை. தயாரிப்பாளர் சங்கம் ஒரு குடும்பம். அங்குள்ள பிரச்னையை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம். நடிகர் சங்கத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளையே இன்னும் விஷால் நிறைவேற்ற முடியவில்லை’ என்றார்.
தயாரிப்பாளர் சங்க தற்போதைய தலைவர் எஸ்.தாணு பேசும்போது,’நடிகர் விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் மீது மரியாதை கிடையாது. எடுத்தெறிந்து ஆணவமாக பேசி கிண்டல் செய்கிறார். புரட்சி தளபதி என்று பட்டம் போட்டுக்கொள்ளும் அவர் என்ன புரட்சி செய்துவிட்டார். அவர் நடித்த படம் தயாரித்து பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் பலர். ஒரு நிறுவனம் அவரை வைத்து தயாரித்த படத்தை வெளியிட முடியாமல் இருக்கிறது. அதற்கான பட்டியல் என்னிடம் உள்ளது. நடிகர் சங்க பொதுச் செயலாளராக பதவி ஏற்றவுடன் கட்டிடம் கட்டப்படும் என்றார். இதுவரை கட்டவில்லை. அங்கிருந்த 100 உறுப்பினர்களை நீக்கி அவர்களது குடும்பத்தை தவிக்கவிட்டிருக்கிறார். தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்தாலும் அந்த காரியத்தைத்தான் செய்வார்’ என்றார்.