ஒரு மெல்லிய கோடு, இந்தியன், முதல்வன், மும்பை எக்ஸ்பிரஸ், பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் மனிஷா கொய்ராலா, கடந்த 2012ம் ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றதால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். முழுமையாக குணம் அடைந்தபிறகு தமிழில் உருவான ஒரு மெல்லிய கோடு படத்தில் கடந்த ஆண்டு நடித்தார். தற்போது பாலிவுட் பழம்பெரும் நடிகையும் சஞ்சய்தத்தின் தாயுமான நர்கிஸ் வாழ்க்கை படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த கையோடோ அல்லது அதற்கு முன்பாகவோ பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி மனிஷா கூறியது: வரும் டிசம்பருடன் நான் கேன்சர் நோயிலிருந்து முழுமையாக குணம் அடைந்து 5 வருடம் நிறைவடைகிறது.
எல்லாம் நல்லபடியாக நடந்தால் விரைவில் பெண் குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்திருக்கிறேன். அந்த குழந்தைக்காகவே இனி என் வாழ்வை செலவிடுவேன். என் வாழ்வில் இதுவொரு புதிய அத்தியாயம். குழந்தையுடன் வாழும் அந்த வாழ்க்கையை அனுபவிக்க அதிக நாள் காத்திருக்க விரும்பவில்லை. விரைவிலேயே அதற்கான பணிகளை தொடங்குவேன். எனது எண்ணங்கள், நான் கற்ற பாடம், அனுபவம் எல்லாவற்றையும் என் குழந்தைக்கு சொல்லித் தருவேன். உலகே மெச்சும்படி அவளை வளர்ப்பதே எனது வாழ்க்கை லட்சியம். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2010ம் ஆண்டு நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபர் சாம்ராட் தாஹல் என்பவரை மணந்த மனிஷா, 2 வருடத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு அவரிடம் விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.