நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1.35 லட்சம் அபேஸ்!
துரைப்பாக்கம்: வங்கியில் பணம் கட்ட வந்த தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் ரூ.1.35 லட்சத்தை பைக் ஆசாமிகள் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவான்மியூர் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பாரிவள்ளல் (24). தனியார் நிதி நிறுவன ஊழியர். நேற்று மதியம் திருவான்மியூர் எல்பி சாலையில் உள்ள ஒரு வங்கியில் ரூ.1.35 லட்சம் செலுத்துவதற்காக பைக்கில் வந்தார்.
பைக்கை நிறுத்தி விட்டு பணப்பையுடன் வங்கிக்குள் செல்ல இருந்தார். அந்த நேரத்தில் பைக்கில் 2 பேர் வந்தனர். பைக்கை நிறுத்திவிட்டு, பாரிவள்ளலை பின் தொடர்ந்தனர். பாரிவள்ளல் வங்கிக்குள் நுழைய இருந்தபோது, அவரது கையிலிருந்த பணப்பையை பறித்துக் கொண்டு 2 பேரும் ஓடினர். திருடன் திருடன் என பாரிவள்ளல் சத்தம்போட்டார்.
அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து 2 பேரையும் அவர் விரட்டிச் சென்றார். அதற்குள் பைக்கில் அமர்ந்து மர்ம நபர்கள் தப்பிவிட்டனர்.
இது குறித்து திருவான்மியூர் போலீசில் பாரிவள்ளல் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து பைக் ஆசாமிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.