புதுடெல்லி, - பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவற்றில் ரூ.500, ரூ.100 நோட்டுகளை மாற்ற வரும் 14ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகள், கேஸ் ஏஜென்சிகள், அரசு மருத்துவமனைகள், மின் கட்டண வசூல் மையங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் நவ.11 வரை செல்லுபடியாகும் மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்த கெடு நேற்றுடன் முடிவடைகிறது.
எனினும், மக்கள் இன்னமும் புதிய கரன்சிகள் கிடைக்காமல் கடும் அவதிப்படுவதால், தற்போது அந்த அவகாசம் மேலும் மூன்று நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நவ.14ம் தேதி வரை அத்தியாவசியத் தேவைகளுக்கும், குடிநீர் வரி, சொத்து வரி, வருமான வரி ஆகியவற்றைச் செலுத்துவதற்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்தலாம். மத்திய அரசு அறிவித்தபோதிலும், பெரும்பாலான இடங்களில் பழைய நோட்டுகளைப் பெற்றுக் கொள்ள மறுப்பதாக பொதுமக்கள் புகார் கூறி, வாட்ஸ் அப்பில் செய்திகள் உலா வருகின்றன.