அமெரிக்காவை சேர்ந்தவர்கள் பேட்ரிக் மற்றும் ஸ்ப்னி. இருவரும் தமிழ் மற்றும் இந்து முறைப்படி திருமணம் செய்ய விரும்பினர். நேற்று நாகை மாவட்டம், சீர்காழி காரைமேட்டில் அமைந்துள்ள ஒளிலாயத்திற்கு வந்தனர். பேட்ரிக் பட்டு வேட்டி அணிந்தும், ஸ்ப்னி பட்டு புடவை அணிந்தும் மணவறைக்கு அழைத்து வந்து அமர வைக்கப்பட்டனர். சிவாச்சாரியார் அருள் தாலி கயிற்றை எடுத்து கொடுக்க பேட்ரிக் ஸ்ப்னி கழுத்தில் கட்டினார். பின்னர் இந்து முறைப்படி பட்டம் கட்டுதல், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. திருமண விழாவுக்கு வந்தவர்கள் மணமக்களுக்கு மொய் எழுதி சென்றனர். பேட்ரிக் கூறுகையில், நானும் ஸ்ப்னியும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தோம். தமிழ்க் கலாசாரப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டுமென விரும்பினேன். அதன்படி இங்கு வந்து திருமணம் செய்து கொண்டோம். தமிழ் கலாசாரப்படி திருமணம் செய்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
பதுங்கிய முதலை
நாகை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த அளக்குடி ஊராட்சி அய்யம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவருக்கு சொந்தமான மூங்கில் தோட்டத்தில் வளர்ந்து இருந்த சீமை கருவேல முட்செடிகளை அகற்றும் முயற்சியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அங்கு பதுங்கி இருந்த முதலை சீறி பாய்ந்து வருவதை பார்த்து பயந்து ஓடினர். சீர்காழி தீயணைப்பு படையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சீர்காழி தாசில்தார் மலர்விழி, விஏஓ ஜெயப்பிரகாஷ், தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) ரமேஷ் தலைமையில் வீரர்களும் விரைந்து வந்தனர்.முட்செடிகளுக்குள் பதுங்கி இருந்த முதலையை சுமார் 2 மணி நேரம் போராடி கயிற்றில் சுருக்கு போட்டு முதலையின் தலையில் மாட்டி லாவகமாக உயிருடன் பிடித்தனர். பிடிபட்ட முதலையின் நீளம் 5.5 அடி. எடை 40 கிலோ. இது பாதுகாப்பாக அணைக்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு நீரில் விடப்படும் என தீயணைப்பு அலுவலர் ரமேஷ் தெரிவித்தார். தோட்டத்தில் முதலை வந்த தகவல் அறிந்து மக்கள் பதைபதைத்துள்ளனர்.
பக்தர்களுக்கு புத்துணர்வு
சேலம் தேர்நிலையம் ராஜகணபதி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இக்கோயிலை ஒட்டியுள்ள சாலை வழியாக தினமும் பயணிக்கும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் இருந்து வெளி யேறும் புகையால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். கோயிலும் மாசடைந்து வருகிறது.
இதையடுத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பக்தர்களின் நலனுக்காகவும் கடந்த சில நாட்களாக கோயிலை சுற்றி புதியதாக டைல்ஸ் கற்கள் பதிக்கும் பணி நடந்தது. தற்போது கோயில் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான காற்று, புத்துணர்வு, மனதிற்கு இனிமை கிடைக்கும். இங்கு வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டிகளில் பல மருத்துவ குணம் கொண்ட செடிகளும் உள்ளன என்கின்றனர் அர்ச்சகர்கள்.
ஸ்டார்களின் பங்களா மோகம்
பாலிவுட் ஹீரோயின் பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படத்தில் நடித்துவருவதுடன், விரைவில் நியூயார்க்கில் செட்டிலாக திட்டமிட்டிருக்கிறார். முன்னதாக மும்பையில் தனது கனவு இல்லத்தை ரூ. 100 கோடி செலவில் கட்ட திட்டமிட்டு வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறார். அதைவிட கொஞ்சம் கம்மியாக ரூ. 90 கோடி செலவில் நடிகர் ராம் சரண் ஐதராபாத்தில் பங்களா கட்டி வருகிறார். இதற்காக பிரபல வீடு வடிவமைப்பாளர் தருண் தஹிலானியை அமர்த்தியிருப்பதுடன் சமீபத்தில் அவரை வரவழைத்து பாலிவுட் டாப் ஸ்டார்கள் எந்தெந்த மாடலில் பங்களாக்கள் கட்டியிருக்கின்றனர் என்பதை வீடியோ மூலம் பார்த்தார். அதைவிட சிறப்பாக தனது பங்களா அமைய வேண்டும் என்பதில் ராம் சரணைவிட அவரது மனைவி உபசனா பிரயாசையுடன் இருக்கிறாராம். பங்காளவிற்குள்ளேயே நீச்சல் குளம், டென்னிஸ் மைதானம், உலக தரம் வாய்ந்த ஜிம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இடம்பெறுகிறது. புதுபங்களாவிற்கு குடிசென்றபிறகு குழந்ைத பெற்றுக்கொள்ள தம்பதிகள் முடிவு செய்திருக்கின்றனர்.
வெறிநாய் வேட்டை
கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்த குப்பம் ஊராட்சி வேலாயுதம்பாளையம் அருகே கொரங்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாமியப்பன்(70). விவசாயியான இவர், தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து 50 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல நேற்று தனது நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீடு திரும்பினார். பின்னர் மீண்டும் வந்து பார்த்த போது 12 ஆடுகள், 7 செம்மறி குட்டிகள் வெறிநாய்கள் கடித்து இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்திருந்தன. பாதித்த ஆடுகளுக்கு கால்நடை மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சாமியப்பன் கூறுகையில், ‘இப்பகுதி சுற்று வட்டாரத்தில் கடந்த மாதத்தில் 20க்கு மேற்பட்ட ஆடுகளை வெறிநாய்கள் கடித்தன. இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தற்போது வெறிநாய்கள் கடித்ததில் எனக்கு சொந்தமான 19 செம்மறி ஆடுகள் பரிதாபமாக இறந்து போனது. இதை தடுக்க மாவட்ட, ஒன்றிய நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
நெடுஞ்சாலை சுங்க கட்டணம் மேலும் 3 நாட்களுக்கு ரத்து - நிதின் கட்கரி உத்தரவு
புதுடெல்லி, -கரன்சிகள் தட்டுப்பாடு காரணமாக வரும் 14ம் தேதி வரை நெடுஞ்சாலை சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கால அவகாசம் எதுவும் கொடுக்காமல் திடீரென அறிவிக்கப்பட்டதால், பொதுமக்கள் ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் அவஸ்தைப்பட்டனர். பெரும்பாலான கடைகளில் இந்த நோட்டுக்களை வாங்காததால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் கடும் சிரமங்களை சந்தித்தனர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சில்லரை தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகளிடம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குவதற்கு ஊழியர்கள் மறுத்தனர். இதனால் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து நவ.11ம் தேதி வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே அறிவித்திருந்தார். தற்போது நிலைமை இன்னும் சீரடையாத காரணத்தால் இந்த சலுகை மேலும் 14ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 14ம் தேதி வரை சுங்க கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதை நிதின் கட்கரி, டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.