கோவா திரைப்பட விழாவில் ‘பாகுபலி’ ரிஜெக்ட்
ராஜமவுலி இயக்கத்தில் தயாரிப்பு மற்றும் வசூலில் சாதனை படைத்த படம் ‘பாகுபலி’. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தனர். இப்படம் பல்வேறு விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை கோவாவில் நடக்க உள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் பனோரமா பிரிவில் திரையிட தேர்வு செய்யப்படாமல் ரிஜெக்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக வகுக்கப்பட்டுள்ள விதிகளை நிறைவு செய்யும் விதத்தில் இப்படம் இல்லை என காரணம் கூறப்பட்டு இது நிராகரிக்கப்பட்டது. மொத்தம் 25 படங்கள் இப்பிரிவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்தி, வங்காள மொழி படங்கள் இடம் பிடித்துள்ளன. இதற்கிடையில் ‘பாகுபலி 2’ படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளிவரும் என்று கூறப்பட்டு வந்தாலும் அப்படம் முடிந்து திரைக்கு வர 2017ம் ஆண்டு ஆகும் என்று பேச்சு எழுந்துள்ளது.