ஜெயம் ரவி, ஹன்சிகா நடிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்' . இப்படத்தில் டி.ராஜேந்தரின் தீவிர ரசிகராக ரவி நடிக்கிறார். டி.ராஜேந்தர் தனது படங்களில் பயன்படுத்தும் ' டண்டணக்கா' என்ற வசனத்தை பயன்படுத்தி இப்படத்தில் பாடல் அமைக்கப்பட்டிருக்கிறது. டங்கா மாரி பாடலை எழுதிய ரோகேஷ் பாடல் எழுத டி.இமான் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் இப்பாடல் வெளியிடப் பட்டது. இதற்கு டி.ராஜேந்தர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.இந்த பாடலை மையமாக வைத்து சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் டி.ராஜேந்தரை நக்கல் செய்வதுபோல் நடனம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுபற்றி ஜெயம் ரவி கூறும்போது, ‘டி.ராஜேந்தர் சாரின் ரசிகராக படத்தில் நடிக்கிறேன். இப்பாடல் அவருக்கு மரியாதை செலுத்தும் பாடலாக இருக்கும். சில வீடியோக்களில் இப்பாடல் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் டி.ராஜேந்தரை தவறாகவும் சித்தரிக்கிறது. இது என் மனதை காயப்படுத்தி உள்ளது' என்றார்.
ஆனால் இந்த விளக்கத்தை ஏற்காத டி.ராஜேந்தர், பட குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் கூறும்போது,‘வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது உண்மைதான். ' டண்டணக்கா' என்ற பாடலை தொடர்ந்து புரமோஷன் செய்வதற்கும், ஒலிபரப்பவும் தடை கோரப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது' என்றார். இதுபற்றி இமான் கூறும்போது,‘இப்பாடல் டி.ராஜேந்தருக்கு மரியாதை தரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி வேறு எந்த நோக்கமும் இல்லை. இப்பாடலை ஒலிபரப்பக்கூடாது என்று எனக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது' என்றார்.