நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் : விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
தஞ்சை: தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. மாநில துணை தலைவர் துளசிமணி தலைமை வகித்தார். கூட்டத்தில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைக் கைவிட வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடகாவும் முல்லை பெரியாறில் கேரளாவும் அணை கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.பம்பை, அச்சன்கோயில், வைப்பாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீத்தேன் வாயு எடுப்பதற்கான ஒப்பந்தத்தை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும். பருத்தி உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் வகையில் முதல் ரக பருத்திக்கு ரூ.10 ஆயிரமும் மற்ற ரகங்களுக்கு ரூ.6 ஆயிரமும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பருத்தி கொள்முதலை அரசே ஏற்று நடத்த வேண்டும். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே குளிர்பான ஆலைக்கு தொழில்துறை வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.