கயத்தாறு: கயத்தாறு அருகே நள்ளிரவு கள்ளக்காதலி வீட்டிற்கு வந்த விஏஓ சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டம் சீலையன்பட்டியைச்சேர்ந்த சுருளி மகன் முத்து (31). தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்தில் விஏஓவாக வேலைபார்த்து வந்தார். இவருக்கு மாலா(29), சத்யா(24) ஆகிய 2 மனைவிகளும், 4 குழந்தைகளும் உள்ளனர். இதில் சத்யாவை முறைப்படி திருமணம் செய்யாமல் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தார்.இந்நிலையில் கயத்தாறு அருகே உள்ள தலையால்நடந்தான்குளத்தைச்சேர்ந்த கூலித்தொழிலாளி சுடலை மனைவி பேச்சியம்மாள் (24) என்பவருடன் முத்துவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பேச்சியம்மாளின் வீட்டிற்கு முத்து அடிக்கடி வந்து சென்றார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் 3 மாதத்திற்கு முன் பேச்சியம்மாள் கணவரை பிரிந்து அதே ஊரில் உள்ள பாட்டி வெள்ளையம்மாள் (65) வீட்டில் தங்கினார். ஆனாலும் விஏஓ உடனான தொடர்பை அவர் துண்டிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு விஏஓ முத்து, கள்ளக்காதலியை சந்திப்பதற்காக தலையால்நடந்தான்குளம் வந்தார். பின்னர் பேச்சியம்மாள் வீட்டு கதவை தட்டினார். அப்போது அவரது பாட்டி வெள்ளையம்மாள் கதவை திறந்து வெளியே வந்தார். அதேநேரம் பேச்சியம்மாளின் கணவர் சுடலையும் அங்கு வந்தார். விஏஓ முத்துவை பார்த்ததும் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. உன்னால்தான் என் குடும்பம் பிரிந்து விட்டது எனக்கூறி அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து முத்து இறந்தார். தகவலறிந்து வந்த போலீசார், விஏஓ உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக பேச்சியம்மாள், அவரது பாட்டி வெள்ளையம்மாள், தம்பி உய்க்காட்டான் (23) ஆகிய 3 பேரை கயத்தாறு போலீசார் கைது செய்தனர். சுடலை தலைமறைவாகி விட்டார். அவரை தேடிவருகின்றனர்.
' மன்மதராசா' முத்துவுக்கு விஏஓ பதவி கிடைத்ததும் அவருக்கு தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளத்தில் பணி வழங்கப்பட்டது. அங்கு வேலைபார்த்து வந்தபோதுதான் அதே பகுதியைச்சேர்ந்த மாலா என்பவருடன் முத்துவுக்கு திருமணம் நடந்தது. அதன்பிறகு வல்லநாடு அருகே மருதன்வாழ்வு கிராமத்திற்கு மாறுதல் கிடைத்ததால் முத்து மனைவியுடன் பாளையங்கோட்டை கேடிசி நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி பிரையண்ட் நகரைச்சேர்ந்த சத்யா என்பவருடன் முத்துவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கள்ளக்காதலி சத்யாவை கேடிசி நகர் பாரதிநகரில் வீடு வாடகைக்கு எடுத்து குடியமர்த்தி குடித்தனம் நடத்தி வந்தார். கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 10ம்தேதி கள்ளக்காதலி வீட்டில் கணவர் தங்கியிருப்பது தெரியவந்ததும் மாலா, அங்கு வந்தார்.
முத்து மற்றும் சத்யாவை கையும் களவுமாக பிடித்து பாளை தாலுகா போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.ஆனாலும் விஏஓ முத்து, சத்யாவுடன் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் கொதிப்படைந்த மாலா தூத்துக்குடி கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரி மற்றும் ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஆகியோர் விசாரணை நடத்தி இருவரையும் சேர்த்து வைத்தனர். ஆனாலும் முதல் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் முத்துவை சஸ்பெண்ட் செய்தனர். சிறிது காலத்திற்கு பிறகு மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.