ஸ்டாக்ஹோம்: உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக சீனா 3-வது இடத்தை பிடிக்கும். அதனுடைய ஆயுத ஏற்றுமதி வளர்ச்சியில் ஜெர்மனியும் பிரான்ஸ் நாடும் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும் என்று ஸ்டாக்ஹோமில் இன்று வெளியான ஒரு ஆய்வு தகவல் கூறுகிறது.உலகளவில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகளுக்கு போர் ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் குறித்து சர்வதேசஅமைதிக்கான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. அந்நிறுவனம் இன்று காலை ஸ்டாக்ஹோம் நகரில் ஒரு ஆய்வு தகவலை வெளியிட்டது.அந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:
உலகளவில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளுக்கும் ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் அநிநவீன போர் விமானங்கள், கப்பல்கள், இன்னபிற போர் ஆயுதங்களை ஏற்றுமதி செய்து அமெரிக்காவும் ரஷ்யாவும் பல்லாயிரம் கோடி டாலர்கள் அன்னிய செலாவணியாக ஈட்டி வருகின்றனர். அதற்கடுத்து பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கடந்த 2010 முதல் 2014-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்நாடுகளுக்கு இணையாக சீனாவும் ஆயுத ஏற்றுமதி செய்து வருகிறது. தெற்காசியாவில் உள்ள 3 நாடுகளில் பாகிஸ்தானுக்கு 41 சதவிகிதமும், அதற்கடுத்து மியான்மர் மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு சீனா ஆயுத ஏற்றுமதி செய்து வருகிறது. அதேபோல், ஆப்ரிக்காவில் 18 நாடுகளை சீனா வாடிக்கையாளராக கொண்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் சீனாவில் ஆயுத ஏற்றுமதி வளர்ச்சி 143 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. உக்ரைன் பிரச்னையை தொடர்ந்து ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. பிரான்ஸ் நாடும் ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதால், தற்போது சீனாவின் ஆயுத ஏற்றுமதி அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது.இதனால் வரும் 5 ஆண்டுகளில், ஆயுத ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்து 3-வதாக சீனா முன்னேறும். ஜெர்மனியும் பிரான்ஸ் நாடும் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும்.இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.