புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சி பட்ஜெட் கூட்டம் நேற்று நடந்தது. பட்ஜெட்டில் கோடைக் காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப் பாட்டைச் சமாளிக்கும் வகையில் குடிநீர்த் திட்டம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று குற்றம்சாட்டிய திமுக கவுன்சிலர்கள், தங்கள் நெற்றியில் பட்டை நாமம் போட்ட படியும், காதுகளில் பூ சுற்றியபடியும் புதுக்கோட்டை நகராட்சி வீதியில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு நகராட்சி நுழைவுவாயி லுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பின்னர் நகர்மன்றக் கூட்ட அரங்குக்கு சென்ற அவர்கள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி படத்தை சுவரில் மாட்டினர்.இதைத் தொடர்ந்து, அங்கு வந்த நகராட்சி ஆணையர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் சேட்டு ஆகியோர் முன்னிலையில் பட்ஜெட் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த தலைவர் ராஜசேகரன் (அதிமுக), 2015-16ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வாசித்தார். அப்போது, பாஸ்கர் உள்ளிட்ட அதிமுக கவுன் சிலர்கள், கருணாநிதியின் படத்தை எடுத்து தூக்கி வீசினர்.
இதனால் ஆவேச மடைந்த திமுக கவுன் சிலர்கள் மேடையில் ஏறி ஜெயலலிதாவின் படத்தை தூக்கி எறிந்தனர். அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு மற்றும் கடும் மோதல் ஏற்பட்டது.இதை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் சுபசரவணன், அறிவுடை நம்பி, ராமசெல்வராஜ் ஆகிய 3 பேரையும் 2 கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப் பட்டது. இதைக் கண்டித்து திமுக கவுன்சிலர்கள் அனைவரும் நகர்மன்றத் தலைவர் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை நகர்மன்றக் கூட்டரங்கில் மாட்ட முயன்றபோது நகராட்சி தலைவர் தடைவிதித்ததுடன், ஆணையரிடம் விண்ணப்பித்து, முறையான அனுமதி பெற்று மாட்ட வேண்டும் என்றார்.
அதேபோல் அதிமுக வினர், ஜெயலலிதாவின் புதிய படத்தை கொண்டு கூட்டரங்கில் மாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தால் அங்கு கூச்சல்- குழப்பம் நிலவியது. இதனால், அனைத்துப் பொருட்களும் தீர்மானங் களாக நிறைவேற்றப்பட்ட தாகவும், கூட்டம் முடிந்த தாகவும் நகர்மன்றத் தலை வர் கூறினார். இதனால், கூட்டம் ஆரம்பித்த 45 நிமிடங்களிலேயே முடிந்து விட்டது.