திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் நகை, பணம் மோசடி : வாலிபர் கைது
ஆவடி: ஆவடி காமராஜர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் தேவிமாரி (25), ஆவடி அனைத்து மகளிர் போலீசில் நேற்று அளித்த புகார்:எனது சொந்த ஊர் திருநெல்வேலி. பட்டப்படிப்பு முடித்துள்ளேன். அம்பத்தூர் அடுத்த மேல் அயனம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அடுத்த கிருஷ்ணன் புதூரை சேர்ந்த செல்வம் (25) என்பவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் தங்கி வேலை பார்க்கிறார். அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. 4 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். திருமணம் செய்வதாக கூறி, என்னிடம் இருந்த 5 பவுன் நகை, ரூ.25 ஆயிரத்தை வாங்கினார். தற்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய போவதாக கூறுகிறார். என்னை திருமணம் செய்யும்படி கூறியதால் கொலை மிரட்டல் விடுத்தார். எனவே செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.போலீசார் வழக்கு பதிந்து நேற்று மாலை செல்வத்தை கைது செய்தனர். பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.