கொளத்தூரில் நள்ளிரவு பயங்கரம் : ஓட்டல் ஊழியர் அடித்து கொலை : மணிப்பூரை சேர்ந்தவருக்கு வலை
புழல்: கொளத்தூரில் நள்ளிரவில் ஓட்டல் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மணிப்பூரை சேர்ந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை கொளத்தூர் செங்குன்றம் பிரதான சாலையில் ஒரு ஓட்டல் உள்ளது. இங்கு மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஷீவா (27), மணிப்பூரை சேர்ந்த ஹென்றி (40) உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் ஷீவாவுக்கும் ஹென்றிக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்தது. நள்ளிரவில் இது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஹென்றி, அங்கு கிடந்த இரும்பு ராடை எடுத்து ஷீவாவின் தலையில் ஓங்கி அடித்தார்.
பலத்த காயம் அடைந்த அவர் அலறி துடித்தார். தடுத்த தீமா (42) என்பவரும் படுகாயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே ஷீவா இறந்தார்.தகவல் அறிந்து கொளத்தூர் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஷீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தீமாவை கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிந்து ஹென்றியை வலைவீசி தேடி வருகிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.