கொழும்பு: இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் வட, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர்.இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி அங்கு அதிபர் சிறிசேன, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க தொடங்கி பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் கொழும்புவில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து இலங்கை தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளரும், இலங்கை எம்பியுமான சுரேஷ் பிரேமசந்திரன் கூறுகையில், இலங்கையில் காணப்படும் இன பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றால் வட, கிழக்கு மாகாணங்களை இணைக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
இந்த இணைப்பு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது. ராஜபச்சே ஆட்சியில் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போடப்பட்டது. எனவே தமிழர் தாயகமான ஈழத்தில் இனப்பிரச்னை தீர்க்கப்பட வேண்டும் என்றால் வட, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டியது முக்கியமானதாகும் என்று இந்திய பிரதமரிடம் தெரிவித்தோம். மேலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அவர்களது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால் தற்பாது மிகவும் சொற்பமான அளவிலேயே குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து பின்னர் பிரதமர் மோடி கூறுகையில், இந்த விஷயத்தில் இலங்கையின் புதிய அரசு சாதகமான மனநிலையில் உள்ளது. அதே நேரத்தில் இதனை மேற்கொள்ள சிறிது கால அவகாசம் தேவை. எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுமை காக்க வேண்டும். மேலும் சிறிசேன அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இலங்கையின் இனபிரச்னையை தீர்க்க இந்திய எப்போதும் உதவியாக இருக்கும் என்று மோடி தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்.இந்த சந்திப்பின் போது தமிழ் தேசிய எம்பிக்கள் சம்பந்தன், சேனாதிராசா, சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜய் தோவல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.