பாட்னா: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார். நாளை லாலு பிரசாத் இச்சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்துகிறார்.மத்திய அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றியது. இதனையடுத்து வருகிற 17ம் தேதி ராஜ்யசபாவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது. இதற்கிடையில் அன்றைய தினம் திரிணாமுல், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு பேரணியாக செல்ல திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும் டெல்லி நோக்கி பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளார். இந்த சூழலில் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று பாட்னாவில் உண்ணாவிரத போராட்டத்தை காலையில் பாட்னாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கினார். பீகாரில் விரைவில் சட்ட மன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அங்கு பாஜ மற்றும் நிதிஷின் ஐக்கிய ஜனதா தள கட்சிகளுக்கு இடையே கடும் அரசியல் போட்டி நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சட்டபேரவையில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் லாலுவின் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவுடன் நிதிஷ் வெற்றி பெற்றார். இந்நிலையில் நிதிஷ்குமாரின் இன்றைய உண்ணாவிரத போராட்டத்தி¢ல் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் செய்தி தொடர்பாளர் வசிஷ்ட நாராயண் கூறுகையில், நிதிஷ் உண்ணாவிரதத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பங்கேற்கின்றனர் என்றார். இதுகுறித்து நிதிஷ் கூறுகையில் விவசாயிகளுக்கு எதிரான இந்த கருப்பு சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றார். அதே போல் தற்போது நிதிஷூடன் அரசியல் கூட்டு சேர்ந்து உள்ள லாலு பிரசாத் பீகாரில் நாளை இந்த சட்டத்தை எதிர்த்து கண்டன பேரணி நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.