திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் நடந்த வன்முறையை கண்டித்து இன்று கேரளாவில் இடதுமுன்னணி நடத்தும் முழுஅடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பஸ், ஆட்டோ, டாக்சிகள் எதுவும் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மதுபார் உரிமையாளரிடமிருந்து ரூ.1 கோடி பணம் வாங்கிய கேரள நிதியமைச்சர் கே.எம். மாணியை பட்ஜெட் தாக்கல் செய்ய விடமாட்டோம் என்று மார்க்சிஸ்ட் கட்சி உள்பட எதிர்கட்சியினர் அறிவித்திருந்தனர். ஆனால் எந்த காரணம் கொண்டும் பட்ஜெட் தாக்கல் செய்வதில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று அமைச்சர் மாணியும் கூறினார். இதையடுத்து சட்டசபைக்கு வெளியே இடது முன்னணி தொண்டர்கள் முற்றுகை போராட்டமும், சட்டசபைக்கு உள்ளே எதிர்கட்சி எம்எல்ஏக்கள் கடும் ரகளையிலும் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு எதிர்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபை உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் நிதியமைச்சர் மாணி, முதல்வர் உம்மன்சாண்டி உள்பட பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி எம்எல்ஏக்களும் சட்டசபை வளாகத்திலே தங்கினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று காலை பட்ஜெட் தாக்கல் செய்ய பலத்த பாதுகாப்புடன் நிதியமைச்சர் மாணி வந்தார். சபை நடத்துவதற்காக சபாநாயகர் சக்தனும் சட்டசபைக்குள் நுழைய முயன்றார். ஆனால் இருவரையும் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் முற்றுகையிட்டனர். சபாநாயகரால் சபைக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. அவரது இருக்கை மற்றும் கம்ப்யூட்டர், மைக் உள்ளிட்ட உபகரணங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதற்கிடையே நிதியமைச்சர் மாணி தான் வழக்கமாக அமர்ந்திருக்கும் முன் வரிசையில் அமராமல் மூன்றாவது வரிசைக்கு சென்றார்.
இந்நிலையில் சபாநாயகர் சக்தன் தனது இருக்கைக்கு வெளியே நின்றபடி நிதியமைச்சர் மாணியை பட்ஜெட் தாக்கல் செய்யுமாறு சைகை காண்பித்தார். இதையடுத்து நிதியமைச்சர் மாணி ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் சபை காவலர்களின் பாதுகாப்பு வளையத்தில் பட்ஜெட் உரையை வாசித்தார். சரியாக 6 நிமிடங்கள் மட்டுமே பட்ஜெட் வாசிக்க முடிந்தது. இதற்கிடையே ஆளுங்கட்சி, எதிர்கட்சி எம்எல்ஏக்கள் சபை காவலர்களுக்கு இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சிவன்குட்டி எம்எல்ஏ மயக்கமடைந்து விழுந்தார். முதலமைச்சரை நோக்கி பாய்ந்த ஜனதாதள பெண் எம்எல்ஏ ஜமீலா பிரகாசம், இந்திய கம்யூ., பெண் எம்எல்ஏ., பிஜிமோள் ஆகியோரை ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் தடுத்து நிறுத்தினர். இந்த கடும் அமளியில் 20 எம்எல்ஏக்கள் மற்றும் 10க்கு மேற்பட்ட சபை காவலர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில் சபையில் எதிர்கட்சி எம்எல்ஏக்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு இடது முன்னணி அழைப்பு விடுத்தது. இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதனால் கேரள முழுவதும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, டாக்சி உள்பட எதும் ஓட வில்லை. சிறிய பெட்டி கடைகள் முதல் வர்த்தக நிறுவனம் வரை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. முழு அடைப்பு விவரம் தெரியாமல் வெளியூர்களில் இருந்து ரயில் மற்றும் விமானத்தில் கேரளாவுக்கு வந்த பயணிகள், ரயில் மற்றும் விமான நிலையங்களில் இருந்து வெளியே செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். ஆனால், அசம்பாவித சம்பவங்ளும் எதுவும் நடைபெற்றவில்லை. இதற்கிடையே திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த கலவரம் தொடர்பாக ஆயிரம் பேர் மீது மியூசியம் மற்றும் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.