கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை இலங்கை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, இந்தியாவின் உதவியை இலங்கை கோரியுள்ளது. இலங்கையில் இரண்டு முறை அதிபராக இருந்த ராஜபக்ஷே, கடந்தாண்டு இறுதியில் நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தார். தமிழர்களின் பேராதரவுடன் மைத்ரிபால சிறிசேன அதிபரானார். ரணில் விக்ரம சிங்கே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், புதிய அரசு ராஜபக்ஷேவின் மீதான குற்றச்சாட்டுகளை தீவிரமாக விசாரிக்க தொடங்கியுள்ளது.ராஜபக்ஷே அதிபராக இருந்தபோது, அவருடைய குடும்பத்தினர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டனர். அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்திருந்தனர். கொழும்பு துறைமுக பணி, கணினி கொள்முதல், வங்கி பரிவர்த்தனை போன்றவற்றில் முறைகேடு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், ராஜபக்ஷே குடும்பத்தினர் பல்வேறு நாடுகளில் பணம் பதுக்கி வைத்துள்ளதும், வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்யும்போது அதில் முறைகேடுகள் நடந்துள்ளதும் தெரியவந்தது. அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே தோல்வி அடைந்த நிலையில், அவரது மகன்கள் மற்றும் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷே உள்ளிட்டோர் வெளிநாடு தப்பினர். இதனால் அவர்களது பாஸ்போட்டை முடக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், ராஜபக்ஷே மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை இலங்கை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. விசாரணையை தொடங்கியுள்ள இலங்கை அரசு, இந்தியாவின் உதவியை கோரியுள்ளது. ராஜபக்ஷே மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பு தருமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீரா கூறுகையில், ‘‘ராஜபக்ஷே மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை ஏற்கனவே தொடங்கி விட்டோம். பல்வேறு நாடுகளில் அவர்கள் பதுக்கி வைத்திருக்கும் பணம் குறித்து விசாரித்து வருகிறோம். இதுதொடர்பாக, இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்’’ என்றார். பிரதமர் மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில் இவ்வாறு இலங்கை அமைச்சர் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இலங்கை அதிபர் சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரம சிங்கே ஆகியோர் தனக்கு எதிராக செயல்பட்டு வருவதாக இருதினங்களுக்கு முன்பு ராஜபக்ஷே தெரிவித்திருந்தார். தன்னை சிறையில் தள்ளவும், குடும்பத்தினரின் பாஸ்போர்ட்டை முடக்க சதி செய்கின்றனர் எனவும் குற்றம்சாட்டினார். அரசியலில் இருந்து ஓய்வுபெறும் பேச்சுக்கே இடமில்லை எனவும் ராஜபக்ஷே கூறியிருந்தார்.இந்நிலையில், ராஜபக்ஷே மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே போர்க்குற்றச்சாட்டுக்களை சந்தித்து வரும் ராஜபக்ஷேவுக்கு இதுபெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு இந்தியாவின் உளவு அமைப்பும் காரணம் என ராஜபக்ஷே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.