தான்சானியாவில் பஸ்& லாரி மோதல் - 42 பேர் பரிதாப பலி
தார் எஸ் சலாம்-தான்சானியா நாட்டில் பயணிகள் பேருந்து மீது சரக்கு லாரி ஒன்று வேகமாக மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 42 பேர் பலியானார்கள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்திய பெருங்கடலில் ஆப்ரிக்க கண்டத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் தான்சானியா அமைந்துள்ளது. இந்நாட்டின் மேற்கே மேபியா நகரில் இருந்து வர்த்தக துறைமுக நகரான தார் எஸ் சலாமுக்கு நேற்று காலை 50&க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு பேருந்து கிளம்பியது.சங்கராவே என்ற இடத்தில் அந்த பேருந்து வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த கன்டெய்னர் சரக்கு லாரி பேருந்துடன் நேருக்கு நேர் வேகமாக மோதியது. அந்த லாரி மோதிய வேகத்தில் பஸ்சின் மீதே விழுந்து கவிழ்ந்தது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் லாரிக்கு அடியில் சிக்கினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினரும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பேருந்துக்கு அடியில் சிக்கியிருந்த 42 பேரின் உடல்களை மீட்டனர். அத்துடன் படுகாயம் அடைந்த 20 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அப்பிராந்திய போலீஸ் அதிகாரி ரமாதானி முங்கி கூறினார்.தான்சானியா நாட்டில் மோசமான சாலைகள் மற்றும் பராமரிப்பு இல்லாத வாகனங்களால் அடிக்கடி சாலை விபத்துகள் நடைபெறுகின்றன. மேலும் பேருந்துகளில் அதிகளவு பயணிகளை ஏற்றி செல்வதும், சரக்கு லாரிகளில் அதிகளவு சரக்கு ஏற்றி செல்வதும் தொடர்ந்து நடைபெறுவதால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்கின்றன.கடந்த 2006&ம் ஆண்டு இதேபோல் அதிகமான பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 54 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.