திருவனந்தபுரம்- பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருகின்ற 14ம் தேதி நடை திறக்கப்படுகிறது. இதன்பிறகு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்துகின்றனர்.பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 14ம் தேதி திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை காட்டுகிறார். அன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. மறுநாள் (15ம் தேதி) முதல் 19ம் தேதி வரை தினமும் சிறப்பு பூஜைகளும், நெய் அபிஷேகமும் நடைபெறும். இந்த 5 நாட்களிலும் உதயாஸ்தமன பூஜை, படிபூஜை, களபாபிஷேகம் ஆகியவையும், 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை சகஸ்ர கலசாபிஷேகமும், 15ம் தேதி காலை யில் லட்சார்ச்சனையும் நடை பெறும். 19ம் தேதி இரவு 10 மணியளவில் சபரிமலை கோயில் நடை சாத்தப்படும். அன்றுடன் பங்குனி மாத பூஜைகள் நிறைவடையும்.இதையடுத்து மீண்டும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக வரும் 24ம் தேதி மாலையில் சபரிமலை கோயில் நடை திறக்கப்படும். மறுநாள் (25ம் தேதி) காலை கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா தொடங்கும். ஏப்ரல் 3ம் தேதி பம்பையில் ஆறாட்டுடன் திருவிழா நிறைவடையும். 18ம் படிக்கு முன் புதிய கேட்சபரிமலையில் 18ம் படிக்கு முன் பித்தளை கேட் போடப்பட்டிருந்தது. கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும் சமயங்களில் இந்த கேட் பூட்டப்படும். கடந்த மண்டல, மகர விளக்கு பூஜைகளின் போது ஏற்பட்ட கடும் நெரிசலில் இந்த கேட் சேதமடைந்தது. இதனால் புதிய கேட் அமைக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்தது.இதன்படி 9 அடி உயரமும் 20 அடி அகலத்திலும் புதிய கேட் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த ஒரு பக்தர் ரூ.6.5 லட்சம் செலவில் இந்த கேட்டை நன்கொடையாக அமைத்து கொடுத்துள்ளார்.