ஹராரே: அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தனது 91-வது பிறந்த நாளை மிகப் பிரமாண்ட முறையில் கொண்டாடினார். அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் யானை உட்பட பல்வேறு காட்டு மிருகங்களின் கறி விருந்து நடைபெற்றது.பிரிட்டனின் காலனி ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1980-ம் ஆண்டு ஜிம்பாப்வே நாடு விடுதலை பெற்றது. இவ்விடுதலைக்கு அந்நாட்டை சேர்ந்த ஜானு பிஎப் இயக்கத் தலைவர் ராபர்ட் முகாபே அரும்பாடு பட்டார்.
இதைத் தொடர்ந்து, அந்நாட்டின் அதிபராக ராபர்ட் முகாபே இருந்து வருகிறார். அவரது பதவிக் காலம் வரும் 2018-ம் ஆண்டு வரை தொடர்கிறது.வெள்ளை இனத்தவர்களை எதிர்த்து ராபர்ட் முகாபேவும் தென் ஆப்ரிக்காவில் நெல்சன் மண்டேலாவும் பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள். பின்னர் நெல்சன் மண்டேலா அதிபராக பதவி வகித்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால், வெள்ளை இனத்தவர்களை எதிர்த்து ராபர்ட் முகாபே உள்ளிட்ட பல்வேறு ஆப்ரிக்க தலைவர்கள் பிரிவினையை ஆதரித்து வருகின்றனர். இதுதொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ராபர்ட் முகாபேவை கண்டு இன்றுவரை அஞ்சி வருகின்றன.
இந்நிலையில், ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே கடந்த வெள்ளியன்று தனது 91-வது பிறந்த நாளை விக்டோரியா ஹில் பகுதியில் மிக பிரமாண்ட முறையில் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் ராபர்ட் முகாபே தனது மனைவி, மகள் மற்றும் கட்சியினருடன் இணைந்து 7 வகையான கேக்குகளை வெட்டினார்.இந்நிகழ்ச்சியில் காட்டு யானை, முதலை உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை உள்ளூர் விவசாயி ஒருவர் ராபர்ட் முகாபேவுக்கு பரிசளித்தார். பின்னர் அவை அனைத்தும் விருந்தினர்களுக்கு உணவாக சமைத்து பரிமாறப்பட்டன. இதுகுறித்து தொலைக்காட்சியில் பேசும்போது, எனக்குப் பிறகு அரசியலில் யாரையும் வாரிசாக நியமிக்க விரும்பவில்லை. யார் வேண்டுமானாலும் ஜிம்பாப்வே அதிபராக வரலாம் என்று ராபர்ட் முகாபே கூறினார்.